சைலண்ட் மாரடைப்பு எவ்வாறு ஏற்படுகின்றது என்பதையும் முன்னெச்சரிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாரடைப்பு
இன்றைய காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் மாரடைப்பு ஏற்படுகின்றது. சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என திடீரென வரும் மாரடைப்பால் பலரின் உயிரும் பிரிந்துள்ளது.
இதற்கு தற்போதைய உணவு முறை, மற்றும் வாழ்க்கை முறையை காரணமாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது முக்கிய காரணமாகும்.
மேலும் கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடுவது, இரவு நேரத்தில் அசைவம் சாப்பிடுவது என பல காரணங்கள் உள்ளது.
மாரடைப்பு ஏற்பட்டால் சில அறிகுறிகள் முன்கூட்டியே தெரியும். ஆனால் சைலண்ட் மாரடைப்பிற்கு அவ்வாறு எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. அதனைக் குறித்து சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்.

சைலண்ட் மாரடைப்பு என்பது இதயத்திற்கு ஆக்ஸிஜன் வழங்கும் கரோனரி நரம்புகள் குறுகுவதால் ஏற்படும் ஒரு மோசமான நிலையாகும்.
இதனை உடனடியாக நாம் கவனிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். மேலும் உலக அளவில் நிகழும் மாரடைப்புகளில் 22 முதல் 60 சதவீதம் வரை சைலன்ட் ஹார்ட் அட்டாக் காரணம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சாதாரண மாரடைப்பின் போது நெஞ்சு வலி, மூச்சு திணறல், வியர்த்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். ஆனால் சைலண்ட் ஹார்ட் அட்டாக்கில் இவ்வாறான அறிகுறிகள் தோன்றாததால் மக்களும் பெரிதாக அதனை கவனத்தில் எடுப்பதில்லை.
உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புகைபழக்கம், மன அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை இதற்குக் காரணமாகும்.
குறிப்பாக சர்க்கரை நோயாளர்களுக்கு இது கவனிக்கப்படாமல் போனால் பின்னர் சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்ற தீவிர பிரச்சினைகளாக மாறும்.
