இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் வேந்தரும், பேராசிரியருமான, நிந்தவூரைச்சேர்ந்த ஏ.எம். இஷ்ஹாக், இன்றைய தினம் (26) புனித மக்காவில் காலமானார்.
தனது பேரப்பிள்ளைகள் சகிதம் புனித மக்காவில் உம்ரா கடமைகளை நிறைவு செய்த கையோடு இலங்கை நேரப்படி இரவு 8.00மணிக்கு அன்னாரின் உயிர் பிரிந்தது.பேராசிரியர் இஷ்ஹாக் அவர்கள், சவூதி அரேபியா தஹ்ரானில் உள்ள பெட்ரோலியம் மற்றும் கனிமங்கள் பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் கடமையாற்றினார்.
அத்துடன் இவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார். நிந்தவூர் சகாத் நிதியத்தின் ஸ்தாபகரான இவர், பல பள்ளிவாசல்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காகவும், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் பல்வேறு வழிகளில் பெரும் பங்காற்றினார்.
அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ள இவர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றிய காலத்தில், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கினார். அத்துடன் பல்கலைக்கழக வளர்ச்சிக்காக அதன் நிர்வாகத்தை எப்போதும் தனது வீட்டிற்கு அழைத்து தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்கி தனது பங்களிப்பை வழங்கினார்.
தற்போது அன்னாரின் ஜனாஸா மக்கா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மக்காவிலேயே அன்னாரின் ஜனாஸா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.