உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி

ByEditor 2

Jun 12, 2025

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகிறது.

லோர்ட்ஸில் புதன்கிழமை (11) ஆரம்பித்த இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் தெம்பா பவுமா, அவுஸ்திரேலியாவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஆரம்பத்திலேயே உஸ்மான் கவாஜா, கமரன் கிறீனை ககிஸோ றபாடாவிடம் இழந்து தடுமாறியது. பின்னர் மர்னுஸ் லபுஷைனும், ஸ்டீவன் ஸ்மித்தும் ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் மார்கோ ஜன்சனிடம் லபுஷைன் வீழ்ந்தார். சிறிது நேரத்தில் அடுத்து வந்த ட்ரெவிஸ் ஹெட்டும் ஜன்சனிடம் வீழ்ந்தார்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் பியூ வெப்ஸ்டர் இணை சில அதிர்ஷ்டங்களுடன் இனிங்ஸை கட்டியெழுப்பியது. இந்நிலையில் 66 ஓட்டங்களுடன் ஏய்டன் மார்க்ரமிடம் ஸ்மித் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த அலெக்ஸ் காரியும் கேஷவ் மஹராஜ்ஜிடம் விழ, அணித்தலைவர் பற் கமின்ஸும் உடனேயே றபாடாவிடம் வீழ்ந்தார்.

இறுதியாக வெப்ஸ்டரும் 72 ஓட்டங்களுடன் றபாடாவிடம் வீழ்ந்ததோடு, நேதன் லையன் ஜன்சனிடம் விழவும், மிற்செல் ஸ்டார்க் றபாடாவிடம் விழவும் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களையே அவுஸ்திரேலியா பெற்றது.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்கா மிற்செல் ஸ்டார்க்கின் இனிங்ஸின் முதலாவது ஓவரிலேயே மார்க்ரமை இழந்தது. சிறிது நேரத்தில் றயான் றிக்கெல்டனையும் ஸ்டார்க்கிடம் இழந்தது.

பின்னர் வந்த வியான் முல்டரும் கமின்ஸிடம் வீழ்ந்ததோடு, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜொஷ் ஹேசில்வூட்டிடம் விழ முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 44 ஓட்டங்களையே பெற்று தென்னாபிரிக்கா தடுமாறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *