அமீரக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!

Byadmin

Dec 28, 2024

அமீரக மருத்துவ நிபுணர்கள் கூறிய விளக்கங்களின் தொகுப்பு பின்வருமாறு;

உலகில் பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் மிக சிறிய அளவில் தேவைப்படும் அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்து விட்டமின் ஆகும். விட்டமின்களின் தேவை பெரும்பாலும் உண்ணும் உணவின் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.

உடலுக்கு தேவையான அளவை பெற நல்ல சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். லத்தீனில் விட்டா என்றால் உயிர், அமைன் என்றால் நைட்ரஜன் மூலக்கூறுகள் என்பது பொருளாகும். மனிதர்களுக்கு தேவையான 13 ஊட்டச்சத்துக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த விட்டமின்களில் ஏ, டி, இ, கே ஆகியவை கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது. பி மற்றும் சி விட்டமின் நீரில் கரையும் தன்மையுடையது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக விட்டமின்கள் உள்ளன. இதனை கடந்து தற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கும் விட்டமின் குறைபாடு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டு மாத்திரை மற்றும் மருந்து வடிவங்களில் மக்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்த விட்டமின்களை செயற்கையாக அதிகப்படியான அளவில் எடுத்துக்கொள்வது மற்றும் தவறான பயன்பாடுகள் காரணமாக உடல்நலனில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.சிலர் விட்டமின்களை உட்கொள்வதில் தீங்கு ஏற்படுவது இல்லை என நம்புகின்றனர்.

ஆனால் இது தவறு என ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்கள் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதேபோல் இரும்பு, துத்தநாகம் ஆகிய நுண்ணூட்ட சத்துகள் செரிமான கோளாறு, குமட்டல், வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். விட்டமின் சி அல்லது டி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்தில் கற்களை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.

விட்டமின்களை சமூக ஊடகங்களில் பார்த்து நிபுணர்கள் அல்லாதவர்களின் ஆலோசனை கேட்டு உட்கொள்வது ஆபத்தானது ஆகும்.

ஏனெனில் இந்த பொருட்கள் எதிர்விளைவை ஏற்படுத்தும் தன்மையை பெற்றுள்ளன. நீண்ட காலத்திற்கு கடுமையான உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகப்படியான விட்டமின்களை உட்கொள்வது என்பது விஷமுள்ள தேனை பருகுவது போன்றது ஆகும் என குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *