புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘தி விசார்ட் ஆஃப் ஓஸ்’-இல் (The Wizard of Oz) நடிகை ஜூடி கார்லேண்ட் அணிந்திருந்த ஒரு ஜோடி ரூபி சிவப்பு காலணிகள், கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 7) அமெரிக்காவில் நடந்த ஒரு ஏலத்தில் 28 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 237 கோடி ரூபாய்) விற்கப்பட்டுள்ளன.கடந்த 1939இல் வெளியான இந்தத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டதில், நான்கு ஜோடி காலணிகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அதில், ஒரு ஜோடி புகழ்பெற்ற ஹீல்ஸ் காலணிகள் தான் சமீபத்தில் ஏலமிடப்பட்டன. இதே காலணிகள் தான் முன்பொருமுறை மினசோட்டா அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்டன.
இதற்கான ஆன்லைன் ஏலம் ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது. இந்த காலணிகளை ஏலம் விட்ட ஹெரிட்டேஜ் ஏல நிறுவனம், காலணிகளுக்கு சுமார் 25 கோடி ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் சுமார் 237 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
ஏலத்தில் இதுவரை விற்கப்பட்ட திரைப்படங்கள் தொடர்பான பழங்கால பொருட்களில், அதிக விலைக்கு ஏலம் போனது இந்த காலணிகள் தான் என்று ஹெரிட்டேஜ் ஏல நிறுவனம் கூறுகிறது.
பிரபல பாப் பாடகி அரியானா கிராண்டே நடித்த ‘விக்ட்’ (Wicked) திரைப்படம் சமீபத்தில் வெளியானது.இத்திரைப்படம், ‘தி விசார்ட் ஆஃப் ஓஸ்’ கதையின் முந்தைய பாகம். எனவே, இத்திரைப்படம் வெளியான பிறகு, ‘தி விசார்ட் ஆஃப் ஓஸ்’ திரைப்படம் குறித்து மீண்டும் பேசப்பட்டது.இந்தப் பின்னணியில்தான் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காலணிகள் ஏலம் விடப்பட்டன.