அரச பல்கலைக்கழகங்களை புதிய யுகத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தும் திட்டமொன்றை செயல்படுத்துவதோடு, அது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டிற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்புத் துறை, தேசிய ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு நிறுவனமாக தரம் உயர்த்தப்படும். அதற்காக 2024இல் 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் இந்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிறுவ அனுமதி வழங்கப்படுவதுடன், தனியார் பல்கலைக்கழகங்களை மேற்பார்வை செய்ய வலுவான சட்டவிதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லாக் கடன் வசதிகளை, தொடர்ந்தும் வழங்குவதோடு, வணிக வங்கிகள் மூலம் சலுகைக் கல்விக் கடன் வழங்கும் முறையை அமுல்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு தேசிய உயர்கல்வி ஆணைக்குழுவை ஸ்தாபித்தல்.
தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை ஆகிய நிறுவனங்களை ஒருங்கிணைத்து தேசிய திறன் விருத்தி ஆணைக்குழுவை நிறுவுதல்.
மத்திய அரசின் கீழ் இயங்கும் தொழில் கல்வி நிறுவனங்கள் மாகாண சபைகளுக்கு மாற்றப்படுவதோடு, திறன் விருத்தி மேம்பாட்டுத் துறையை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் மாகாண கல்வி சபைகளை நிறுவுதல்.
தொழில்நுட்ப தொழில்துறை திறன்களை மேம்படுத்த நிதியமொன்றை ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 2024 ஆம் ஆண்டிற்கு 450 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.
கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும், நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த கடினமான பாதையில் நாம் தொடர்ந்து பயணித்தால், சிறந்த பொருளாதாரத்தை விரைவில் உருவாக்க முடியும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும் போது, நாடு சரியான பாதையில் செல்வது 100% உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதுவரையான பயணத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாகத் தெரிவித்தார்
பணவீக்க விகிதத்தை ஒற்றை இலக்கமாக குறைக்க முடிந்ததால், பணவீக்கத்தின் தாக்கத்தில் இருந்து நாட்டை மீட்க முடிந்துள்ளதாக 2024 வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்டெடுப்பது மிகவும் கடினமான செயற்பாடு என்று தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சியைக் கைப்பற்றும் அரசியல் நோக்கத்துடன் மக்களிடையே நிவாரணம் வழங்கும் கனவு மாளிகைகளை நிர்மாணித்தால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கே தள்ளப்படலாம் எனவும் தெரிவித்தார்.
இதுவரையான பயணத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக 2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் நட்டத்தை ஈடுசெய்ய, அரச வங்கிகளில் தொடர்ச்சியாக கடன்களைப் பெற்று வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலைமையினால் அந்த வங்கிகள் பலவீனமடைந்து வீழ்ச்சியடைவதைத் தடுக்க மக்களின் வரிகளைப் பயன்படுத்த அரசுக்கு நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாரிய அளவிலான குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க வலு சக்தியை பிரதான கட்டமைப்புடன் இணைப்பதற்குத் தேவையான அனைத்து சட்ட ரீதியான தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும், செயல்திறனற்ற மின்சார சபையை வினைத்திறன்மிக்க நிறுவனமாக மறுசீரமைப்பதற்கான ஒழுங்குவிதிகள் தற்போது வகுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.