விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கும் இடையில் நிலவி வரும் முறுகல் நிலை காரணமாக 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டையும் பல சர்வதேச போட்டிகளை நடத்துவதையும் இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் எலடய்ஸ், ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவை மாநாடு மற்றும் எதிர்வரும் பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இலங்கை நடத்த வேண்டும் என்றால் ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் சுயாதீன தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 இல் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ணம் , 2026 இல் ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் மற்றும் 2027 இல் பெண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் ஆகியவற்றின் முதன்மையான அனுசரணை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு, வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு அழுத்தமின்றி அரசாங்கத்தின் ஆதரவு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. .
விளையாட்டுத்துறை அமைச்சரின் சில நடவடிக்கைகளால் இவ்வாறான அழுத்தங்கள் ஏற்படலாம் என சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த ஆகஸ்ட் மாதம் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது.
மேலும், ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிலிருந்து இது குறித்து கிடைக்கப்பெறும் உறுதிப்படுத்தலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.