ரயில் கடவையைக் கடந்த குடும்பஸ்தர் ஒருவர் ரயில் மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பூதராயர் சிவன் கோவிலடி, திருநெல்வேலியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55 ) என்பவராவார்.
மேற்படி குடும்பஸ்தர் கமநல சேவை திணைக்களத்தில் கடமை புரிவதாகவும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் கடிதம் ஒன்றை வழங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஏ-9 வீதியில் உள்ள ரயில் கடவையை நண்பகல் 12 .40 மணியளவில் கடக்க முற்பட்டபோது கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி சென்ற கடுகதி ரயில் அவரை மோதித் தள்ளியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர்.