எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் இலங்கையின் கடல்சார் சூழல் மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்கு, கப்பலின் உரிமை நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டது.
இதனுடன் தொடர்புடைய அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான தீர்ப்பை அறிவித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இந்த சம்பவத்தில் அப்போதைய சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளித்தது.
சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ல், கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் கடல் பகுதியில் 2021 மே மாதம் 19 ஆம் திகதி தீ விபத்துக்கு உள்ளானது.
அடுத்த நாள் கப்பலில் ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. இதன்போது கப்பலில் 25 டன் நைட்ரிக் அமிலம் மற்றும் 1,486 கொள்கலன்களில் பிற இரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கப்பல் சில நாட்களுக்குள் முற்றிலுமாக தீக்கிரையானது. இது உலக வரலாற்றில் மிகப்பெரிய கடல்சார் சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இத்தகைய சூழலில், கப்பலால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரி பேராயர் மெல்கம் கர்தினா் ரஞ்சித் ஆண்டகை, சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் மீனவ சமூகம் உயர் நீதிமன்றத்தில் நான்கு அடிப்படை உரிமைகள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதன்படி, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ தலைமையில் தீர்ப்பை அறிவித்தது. 30 நாள் விசாரணையின் பின்னர் வழங்கப்பட்ட இத்தீர்ப்பு 361 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது.
X-PRESS PEARL தீ விபத்து
