பாலத்தில் கவிழ்ந்த லொறி

ByEditor 2

Jul 3, 2025

மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்துக்கு செல்லும் பாலத்தின் ஊடாக மினி லொறி ஒன்று  தண்ணீர் மற்றும் மீன்பிடி வலை போன்ற பொருட்களை ஏற்றிச் சென்ற போது பாலம் இடிந்து விழுந்ததில் லொறி கடலுக்குள் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் புதன்கிழமை (2) அன்று காலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கோயில் வாடி மீன்பிடித் துறைமுகத்திற்கு செல்வதற்காக கடலுக்கு நடுவே பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பாலம் அமைக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகாலம் கடந்துள்ள போது பாலம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதால் உடனடியாக பழைய பாலத்தை  அப்புறப்படுத்தி விட்டு புதிய பாலம் அமைத்து தரும்படி மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் புதன்கிழமை (02) அன்று காலை வழக்கம் போல் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தயாராகுவதற்காக ஐஸ், மீன்பிடி வலை, உணவு பொருட்கள், குடி தண்ணீர் உள்ளிட்டவற்றை ஏற்றிக் கொண்டு  பாலத்தின் ஊடாக பிரயாணித்த போது  திடீரென தண்ணீர் வண்டியின் பாரம் தாங்காமல் பாலம் உடைந்து  லொறி தலை கீழாக கடலுக்குள் விழுந்ததையடுத்து அதன் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்ததுடன் உயிர் தப்பினர்.

இதனையடுத்து அவர்களையும் விபத்துக்குள்ளான லொறியையும் மீனவர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர்.

இதேவேளை மீன்பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு மீனவர்களும் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கொண்டு செல்ல முடியாமல் மீனவர்கள் சிரமத்திற்கு  உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *