வவுனியா – சமயபுரம் பகுதியில் மனைவி மற்றும் அவரது தாயாரை கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு வந்த அந்த நபர், தனது மனைவியையும், மாமியாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டையும் தீ வைத்து கொழுத்தியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் அந்த வீட்டின் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்தாரா அல்லது கொலையா? என்பது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் வசந்தி வயது 30, அவரது தாயாரான இந்திரா வயது 69, என்ற இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஸ்ணகுமார் வயது 45 என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.