பொலிஸார் மீது தாக்குதல்; 5 பேர் விளக்கமறியலில்

ByEditor 2

Jun 27, 2025

மட்டக்களப்பு, சின்ன ஊறணி (வன்னி) பகுதியில் திருடனை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட ஐந்து பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன ஊறணி (வன்னி) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சிப் பெட்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேக நபரான திருடனை கைது செய்ய மட்டக்களப்பு பொலிஸார் நேற்று முன்தினம் (25) பிற்பகல் 1:30 மணியளவில் அவரது வீட்டுக்கு சென்றனர். 

இதன்போது, சந்தேக நபரும் அவருடன் இருந்த இரு பெண்கள் உட்பட ஆறு பேர் கொண்ட குழு, பொலிஸார் மீது கத்தியால் குத்தியும், கம்புகளால் அடித்தும் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதில் படுகாயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடி தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபரான திருடன் உட்பட மூன்று ஆண்கள் மற்றும் இரு பெண்கள் என ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *