தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளரும், முக்கிய அரசியல் ஆர்வலராகவும் பணியாற்றிய துசித ஹலோலுவ பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் மற்றும் அதற்கு உதவிய மேலும் இருவரே கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை மற்றும் கிருலப்பனை ஆகிய பகுதிகளில் வைத்து 31, 32 மற்றும் 40 வயதுடைய மூவரும் சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடமிருந்த 4 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள், வத்தளை மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம், நாரஹேன்பிட்ட, கிரிமண்டல மாவத்தையில் கடந்த 17 ஆம் திகதி இரவு நடத்தப்பட்டது. வாகனத்திலிருந்து சில கோப்புகளை எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.