வெற்றிகரமாக நடைபெற்ற நிதியியல் பிராந்திய ஆலோசனைக் கூட்டம்

ByEditor 2

May 27, 2025

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் ஆசியாவுக்கான நிதியியல் உறுதிப்பாட்டுச்சபையின் பிராந்திய ஆலோசனைக்குழுக்கூட்டம் கடந்த வாரம் கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது.

ஆசியாவுக்கான பிராந்திய ஆலோசனைக்குழுக்கூட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது முறையாக இக்கூட்டம் மத்திய வங்கியினால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் ஹொங்கொங் நாணய அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி எட்டி யூஈ ஆகியோர் இணைத்தலைமை தாங்கிய இக்கூட்டத்தில் அவுஸ்திரேலியா, புருணை, தாருஸலாம், கம்போடியா, சீனா, ஹொங்கொங் (விசேட நிர்வாகப் பிராந்தியம்), இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கொரியா, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அதுமாத்திரமன்றி நிதியியல் உறுதிப்பாட்டுச்சபை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதே நிதியியல் கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக உலகளாவிய மற்றும் பிராந்திய நிதியியல்சார் பாதிப்புக்கள், எல்லை கடந்த கொடுப்பனவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், வங்கியல்ல நிதியியல் இடையீட்டுடன் இணைந்த அபிவிருத்திகள் மற்றும் இடநேர்வுகள், பிணையமாக்கல் சந்தைகளுடன் தொடர்புடைய மறுசீரமைப்புக்கள் என்பன பற்றி பரந்துபட்ட அடிப்படையில் ஆராயப்பட்டது.

இவை தொடர்பில் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பல்வேறு நாடுகளினதும் பிரதிநிதிகள், பிராந்திய ரீதியில் இந்நிதியியல் சவால்களை அணுகுவதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *