வெளிநாட்டுப் பிரஜை மீது தாக்குதல்

ByEditor 2

May 26, 2025

இலங்கையர் ஒருவரால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை தாக்கிய சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இச் சம்பவமானது கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெலிகம பொலிஸ் பிரதேசத்தில் நடந்துள்ளதுடன், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இந் நாட்டுக்கு வருகை தந்த போது இலங்கையர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக 14.02.2024 ஆம் திகதியன்று வெலிகமை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இச் சுற்றுலாப் பயணி இந் நாட்டுக்கு வருகை தந்ததுடன், அவருடைய கேமராவில் தனது நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்து கொண்டு வெலிகமை பிரதேசத்திற்குச் சென்றதாகவும், அதன் போது வெலிகமை பெலேன கடற்கரையிலுள்ள நீர் சறுக்கு பயிற்சி நிலையத்திற்கு சென்று காட்சிகளை ஒளிப்பதிவு செய்த போது, அந்த நிலையத்தின் ஊழியர் ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை அந் நபர் தாக்கியுள்ளதாக அறியமுடிந்தது.

அதற்கமைய சம்பவ தினத்தன்று தாக்குதல் தொடர்பாக வெலிகமை, பெலேன பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய நபர் ஒருவர் வெலிகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், 11.09.2025 ஆம் திகதி இவ் வழக்கு விசாரணைக்காக  நீதிமன்றத்தினால் மீண்டும் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

இந் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சில சந்தர்ப்பங்களில் பல்வேறு நபர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல் உட்பட அவர்களால் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அல்லது சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிரப்படும் ஒளிப்பதிவுகள் தொடர்பாக இலங்கை பொலிசாரினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் என்பதுடன், சமீப காலத்தில் அல்லது சில தினங்களுக்கு முன்பு நடந்த சம்பவமாக சித்தரிக்கப்பட்டு சில நபர்களால் சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிவிறக்கம் செய்யப்படுவதாக அவதானிக்க முடிகின்றது.

அதனால் முன்பு நடந்த சம்பவங்களை மீண்டும் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்யப்படும் நபர்கள் அல்லது ஒரு குழுக்களினால் நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்துவது அல்லது வேறு நோக்கத்துடன் செயல்படுகின்றனரா என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வாறு செயல்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *