இந்திய சமையலறைகள் ஒவ்வொன்றிலுமே மசாலாப்பொருட்கள் நாம் நினைக்கும் அளவை விட அதிகமாகவே இருக்கும்.
இந்திய உணவுகள் உலகம் முழுவதும் பிரபலமாக இருப்பதற்கு அதில் சேர்க்கப்படும் மசாலாப்பொருட்கள் காரணமாக அமைகிறது. ஒவ்வொரு இந்திய உணவிற்கும் அதற்கென தனிப்பட்ட சொந்த மசாலா கலவை தேவை.
மேலும் ஒவ்வொரு மசாலாவிற்கும் அதன் சொந்த சுவை மற்றும் முக்கியத்துவம் உள்ளது. இந்த மசாலாப் பொருட்கள் சுவையில் மட்டுமல்ல, விலையிலும் வேறுப்பட்டவையாக காணப்படும்.
இந்திய மசாலாப்பொருட்களின் நறுமணம் மற்றும் சுவைக்காக உலகம் முழுவதும் உள்ள பலர் விரும்பி வாங்குகிறார்கள்.
அந்த வகையில், உலகிலேயே மிக விலையுயர்ந்த மசாலா என்ன என்பதனையும், அதற்கு ஏன் அவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது என்பதனையும் பதிவில் பார்க்கலாம்.
விலையுயர்ந்த பொருள் என்ன?
உலகிலுள்ளவர்கள் அதிக விலைக்கு வாங்கும் மசாலாப் பொருட்களில் முதல் இடத்தில் இருப்பது “சிவப்பு தங்கம்” என அழைக்கப்படும் குங்குமப்பூ தான்.
வழக்கமாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குழந்தையின் நிறத்தை அதிகரிக்க பாலில் கலந்து குடிப்பார்கள். ஒரு கிலோ குங்குமப்பூவின் விலை ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை இருக்கலாம்.
குங்குமப்பூ
“குங்குமப்பூ” என்பது ஆட்டம்ன் குரோக்கஸ் என்ற தாவரத்தின் பூவிலிருந்து வரும் ஒரு அரிய மற்றும் மதிப்புமிக்க மசாலாப் பொருளாகும். இதனை “குரோக்கஸ் சாடிவஸ்” என்றும் அழைப்பார்கள்.
இந்த அழகான பூ இலையுதிர்காலத்தில் மட்டுமே பூக்கும். அந்த பூவின் நடுவில் ஒரு சிறிய சிவப்பு நூல்கள் போல் உள்ளன. இதனை சூலகங்கள் என்கிறார்கள் இது தான் குங்குமப்பூ என விற்கப்படுகிறது.
மென்மையான இழைகள் கவனமாக எடுக்கப்பட்டு, உலர்த்தப்பட்டு மசாலாவாக பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு சூலகங்களைத் தவிர, பூவின் மஞ்சள் மகரந்தங்கள் மற்றும் ஊதா இதழ்களும் இயற்கை சாயங்களை தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.