தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

ByEditor 2

May 4, 2025

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, 10 லட்சம் ரூபா மதிப்பிலான வலை, ஜி.பி.எஸ். கருவி, மீன்கள் போன்றவற்றை பறித்துச் சென்றனர். இதில், 20 மீனவர்கள் காயமடைந்தனர் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான படகில், ஆனந்த் மற்றும் முரளி, சாமிநாதன், வெற்றிவேல், அன்பரசன் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் அதிவேக படகில் வந்து, கத்திமுனையில் தாக்குதல் நடத்தி, வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதேபோல, வெள்ளப்பள்ளம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த  19 மீனவர்கள் மீது, அடுத்தடுத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி, பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த 5 தாக்குதல் சம்பவங்களிலும் பலத்த காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாகை கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய எல்லையில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் தங்களைத் தாக்கி, 10 லட்சம் ரூபா மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்தடுத்து 5 படகுகளை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்களின் செயல் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *