CCTV கெமராக்களால் பல சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ByEditor 2

Apr 22, 2025

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வாகன சாரதிகளின் வீடுகளுக்கு, அவர்கள் செய்த வாகன விதிமீறல்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வாகன விதிமீறல்கள்

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், கொழும்பு நகரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள CCTV கெமராக்கள் மூலம் வாகன விதிமீறல்களைக் கண்டறியும் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், வீதி விதிகளை மீறிய 4,048 வாகன சாரதிகளுக்கு எதிராக அபராதம் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ், உரிய முறையில் உரிமை மாற்றப்படாத 241 வாகனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனம் விற்பனை செய்யப்படும்போது, உரிமை மாற்றம் கட்டாயமாகச் செய்யப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் 724 வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக்களால் 764 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில், 1,535 கடுமையான விபத்துக்களும், 2,699 சிறிய விபத்துக்களும் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *