மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (17) அன்று தெரிவித்தார்.
மன்னாரில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு குறித்து இந்திய அரசாங்கத்துடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டதாகவும் கூறினார்.
போரின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விடுவிப்பதற்கும், மூடப்பட்ட வீதிகளை மீண்டும் திறப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்..
மேலும், போரின் போது மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன. சில சாலைகள் மூடப்பட்டன. சில தனியார் நிலங்கள் வனத்துறையின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டன. மக்கள் தங்கள் நிலங்களில் குடியேறவும், சுதந்திரமாக விவசாயம் செய்யவும் அனுமதிக்கும் இந்த பிரச்சினைகள் அனைத்தையும் நாங்கள் தீர்ப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.