மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு, பின் கொடுப்பனவு வசதிகள் அடிப்படையில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அஞ்சல் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி அஞ்சல் மா அதிபதி எச்.எம்.பீ. ஹேரத் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்று நிரூபம் சகல மாகாணப் பிரதி அஞ்சல் மா அதிபதிகளுக்கும், பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் கள். அஞ்சல் அதிபர்கள் மற்றும் உப அஞ்சல் அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலுக்கான தேர்தல் ஆணைக்குழுவிற்கு மாவட்ட தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோரால் அனுப்பப்படும் கடிதங்கள், பொதிகள் மற்றும் ஆவணங்களையும், கிராம உத்தியோகத்தர்களுக்கு, மாவட்டத் தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களுக்கு, பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்புவதற்காக அஞ்சல் இடப்பட்ட பொதிகளையும், கடிதங்களையும் முன்னுரிமையளித்து முதல் அஞ்சலிலேயே அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிக்காக வேறு அரச திணைக்களங்கள் மற்றும் அமைச்சு களிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும் கடித ஆவணங்களுக்காகவும் மேற்படி முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தேர்தல் முடிவடைந்து ஒரு மாதம் வரை பின் கொடுப்பனவு அஞ்சல் வசதி அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆவணங்கள் அடங்கிய பொதிகள் பாரம் எடுக்கும் பொழுது பாதுகாப்பு சம்பந்தமான கவனம் எடுப்பது மிகவும் அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.