நில அபகரிப்பு தடுத்து நிறுத்தம்

ByEditor 2

Apr 1, 2025

சட்டவிரோதமான நில அபகரிப்பு, கிராம உத்தியோகத்தர் ஒருவரின் முயற்சியால்    தடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் காரைத்தீவில் ஞாயிற்றுக்கிழமை (30)   இடம் பெற்றது.

குறித்த பகுதியில் இனந்தெரியாத நபர்களால் சட்டவிரோதமாக நிரப்பப்பட்ட கிறவல் மண் அகற்றப்படும் போது காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜகத் மற்றும் காரைத்தீவு பிரதேச சபையின் செயலாளர் அ.சுந்தர குமார் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் சமூகமளித்திருந்தனர்.

மேலும் காரைத்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் காரைத்தீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியை அண்டிய பகுதிகளில் உள்ள சதுப்பு நில வயல் காணிகளில் அனுமதியற்ற வகையில் மூடப்பட்டு வருகின்றன.  இது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் காரைத்தீவு 01ம் குடியிருப்பு பகுதியில் இருந்து வெள்ள நீர் வடிந்து ஓடுவதற்காக அமைக்கப்பட்ட வடிகாலில் இனந்தெரியாத நபர்களால் கிரவல் மண்ணிட்டு கடந்த 23 ஆம் திகதி மூடப்பட்டது. 

இது தொடர்பாக குறித்த பகுதின் கிராம உத்தியோகத்தர் செ.கஜேந்திரன் பிரதேச செயலாளருக்கு அறிக்கையிட்டதை தொடர்ந்து பொலிஸ் முறைப்பாட்டினையும் மேற்கொண்டு இருந்தார்.  இந்நிலையில் குறித்த கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளரின் அனுமதியோடு காரைத்தீவு  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேச சபை செயலாளர் மற்றும் பிரதேச தன்னார்வ தொண்டர்களோடு இணைந்து ஞாயிற்றுக்கிழமை  (30)  குறித்த வடிகானில் உள்ள நிரப்பப்பட்ட கிறவல் மண் முற்றாக அகற்றப்பட்டது. கிராம உத்தியோகத்தரின் நடவடிக்கையை பலரும் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *