பாக். ரயில் கடத்தல் (UPDATE)

ByEditor 2

Mar 12, 2025

பாகிஸ்தான் நாட்டில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயிலை மறித்த தீவிரவாதிகள், துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், சுமார் 182 பேரை பிணைக் கைதிகளாக வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அந்த நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 20 பேரை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள் செவ்வாய்கிழமை (11) கடத்தினர். இதற்கு பலூச் விடுதலை இராணுவம் (Baloch Liberation Army-BLA) எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 20 பேரை கொன்றுள்ளதாக அந்த தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் வசம் சுமார் 182 பேர் பிணைக் கைதிகளாக உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. பாதுகாப்பு படை அதிகாரிகள் தங்களை நெருங்கினால் பிணைக்கைதிகள் அனைவரையும் கொல்வதாக மிரட்டல் விடுத்துள்ளது.

தங்களை தரை வழியாக ராணுவம் நெருங்க முடியாத சூழல் நிலவுவதாக பலூச் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது. அந்த அளவுக்கு தங்கள் தரப்பில் இருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இருப்பினும் வான்வழியாக தங்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன்களை பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தி வருகிறது.

ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு இதற்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் கூடுதல் ராணுவ படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். தீவிரவாதிகளின் இந்த கொடுஞ்செயலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் அரசு இதுவரை தெரிவிக்க்காமல் உள்ளது.

என்ன நடந்தது– 9 பெட்டிகளைக் கொண்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ், செவ்வாய்க்கிழமை (11) அன்று பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது தீவிரவாதிகள் திடீரென ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் காயமடைந்ததை அடுத்து, ரயில் தடத்தில் இருந்து விலகி உள்ளது. இதையடுத்து, ரயிலில் இருந்த பயணிகள் பதற்றமடைந்துள்ளனர். அவர்களை தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். அப்போது, ரயிலில் இருந்த பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், தீவிரவாதிகள் பதில் தாக்குதலில் நடத்தியதாகவும்   த ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *