இந்த யுகத்தின் புதிய தலைமுறைகளின் வாழ்வொழுங்கில் அதிநவீன தகவல் தொழில் நுட்பம், செயற்கைக் கோள் தொழில் நுட்பம், இன்டர் நெட், சமூக ஊடகங்கள், இன்டர்நெட் விளையாட்டுகள், நிகழ்நிலை வகுப்புகள், செயலமர்வுகள், மாநாடுகள், பல்லாயிரக் கணக்கான செயலிகள், டிஜிட்டல் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு என பல்வேறு கண்டுபிடிப்புகள் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஒவ்வொருவரது கரங்களிலும் கையடக்க அலைபேசிகளிலும் ஆதிக்கம் செலுத்துவதை அறிவோம்.
இன்று சிறியவர்கள் முதல் வளர்ந்தவர்கள், பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் ஒரு ஸ்மார்ட் போனுடன் அல்லது இலக்ட்ரொனிக் கருவியுடன் பிணைக்கப்பட்டிருப்பதனை நாம் அறிவோம்.
அத்தகைய கருவிகள் திரைகளின் சாதகமான பாதகமான பாவனைகள், விளைவுகள் குறித்தும் அறிந்து வைத்திருக்கிறோம், எமது மனித மணித்தியாலங்களின் அதிகமான பகுதியை அவை ஆக்கிரமித்து எம்மை அவற்றின் போதையில் அடிமைப்படுத்தி விட்டிருப்பதனையும் அறிவோம்.
நிஜ உலகில் எவ்வாறு நாம் சத்தியம், உண்மை, நீதி, நேர்மை, அன்பு, அறம், தர்மம் என ஹலால் ஹராம் பேணி இறை பிரக்ஞையுடன் உளத் தூய்மையுடன், இம்மை மறுமை வாழ்வு குறித்த கரிசனைகளுடன் ஆன்மீக அறநெறிகள் பண்பாடுகள் போற்றி வாழ்வது போல் இந்த டிஜிட்டல் வர்சுவல் உலகிலும் எமது ஷரீஅத் சட்டங்கள் போதிக்கும் வரைமுறைகளை அறிந்து கடைப்பிடித்தல் வேண்டும்!
நிஜவாழ்வில் அன்றாட வாழ்வில் ஐவேளை தொழுகைகளுடனும் கற்றுத் தரப்பட்டுள்ள நேர முகாமை முதல் எமது தொடர்பாடல்கள், கொடுக்கல் வாங்கல்கள், குடும்ப, சமூக உறவுகள், எமது கடமைகள், பொறுப்புகள், எமது கல்வி, தொழில், வியாபார, வர்த்தக நடவடிக்கைகள், எமது அரசியல், கலை கலாசார பண்பாடுகள், எமது சமூக ஊடக நடத்தைகள் என சிலவற்றிலும் ஆன்மீக அறநெறிகள் பேணுவது எம்மீது விதிக்கப்பட்ட கடமையாகும்!
ஆக, ஒரு விசுவாசியின் மனோ இச்சைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆன்மீக பண்பாட்டு பயிற்சிகள் தரும் இந்த புனிதமிகு ரமழான் மாதத்தில் அவற்றின் எதிர்மறையான தாக்கங்கள், பாதிப்புக்களில் இருந்து எம்மையும் எமது மனைவி மக்கள் அன்பிற்குரியோர், நண்பர்களையும் விடுவித்து பாது காத்துக் கொள்வதில் நாம் அதிக கரிசனை கொள்வது கட்டாயமாகும்.
உடல் உள ஆரோக்கியம் ஒரு புறமிருக்க நோன்பில் நாம் புரிய வேண்டிய பர்ழான நபிலான வணக்க வழிபாடுகள் மற்றும் குர்ஆன் திலாவத் போன்றவற்றிற்கான கால நேரங்களை காவு கொள்ளாது தவிர்த்துக் கொள்ள முடியும்.
அதேபோல் விரும்பத்தகாக, வெறுக்கத் தக்க தடுக்கப்பட்ட தொடர்பாடல்கள், பதிவுகள், பகிர்வுகள் என்பவற்றை தவிர்த்து தவிர்ந்து கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.
ஆனால், குர்ஆன் திலாவத், விரிவுரைகள், பயான்களை கேட்பது, பரஸ்பரம் நல்லுறவுகளை புதுப்பித்துக் கொள்வது, நிகழ்நிலை நிகழ்வகளை நடத்துதல் போன்ற ஸாலிஹான அமல்களுக்காக அவற்றை பாவிப்பது வரவேற்கத் தக்கது.
குறிப்பாக குழந்தைகள், சிறார்களை அதிகரித்த டிஜிட்டல் திரைகள், கருவிகளின் முறையற்ற பாவனைகள், இன்டர்நெட் விலையாட்டுக்கள் என்பவற்றில் இருந்து தூரமாக்குவது பயனுள்ள விடயங்களில் ஈடுபடுத்துவது எமது கடமையாகும்.
சுருக்கமாக, பெளதீக வாழ்வில் ஹலால் ஹராம் மஹ்ரம் பேணுவதனை விட டிஜிட்டல் உலகில் தக்வாவுடன் ஆன்மீக பண்பாட்டு பக்குவத்துடன் வாழ்வது சிரமமான காரியம் என்பதனை நாம் அறிவோம்!
பெளதீக உலகில் நோன்பிருப்பதனை விடவும் ஸைபர் உலகில் நோன்பிருப்பது யுகத்தின் மிகப் பெரும் சவாலாக மாறி வருவதால் கற்றறிந்த கல்விமான்கள், உலமாக்கள், கல்வி உயர்கல்விச் சமூகம், மஸ்ஜித் நிர்வாகங்கள், பெற்றார், பாதுகாவலர்கள் என சகல தரப்பினரும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி போதிய தீவிர விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்த வேண்டும்.
உங்கள் ஆத்மார்த்தமான பிரார்தனைகளில் ஷாம் தேசம், பலஸ்தீன காஸா மக்களை, எம்மை, எமது பெற்றோரை, உடன்பிறப்புக்கள், மனைவி மக்கள், உற்றார் உறவினர், ஆசான்கள் மற்றும் அறப்பணி புரிவோரையும் மறவாதீர்கள்!
ரமழான் கரீம்!