“அரசாங்கம் கல்விக்கு விசேட கவனம் செலுத்தி வருகிறது” – பிரதமர்

ByEditor 2

Feb 15, 2025

பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 வருடங்களாக எவ்வித மாற்றங்களுக்கும் உட்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புலதிசிபுர தேசிய கல்விக் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று பொலன்னறுவை புலதிசிபுர கல்விக் கல்லூரியின் பழைய  மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘புலதிசிய தருனை’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புலதிசிபுர கல்விக் கல்லூரியின் இலச்சினையுடன் கூடிய நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்ததுடன், வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார். 2000 முதல் 2025 வரை இங்கு பணியாற்றிய பீடாதிபதிகள் உட்பட முழு பணிக்குழாமினருக்கான பாராட்டு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் என்ற வகையில் உத்தியோகபூர்வமாக ஒரு கல்விக் கல்லூரிக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

எமது அரசாங்கம் கல்விக்கு விசேட கவனம் செலுத்தி வருகிறது. நாட்டில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்த, கல்வியின் தரத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.

2026 ஆம் ஆண்டு முதல் நாம் செய்யப்போகும் கல்விச் சீர்திருத்தம் ஒட்டுப் போடுகின்ற ஏற்கனவேயுள்ள ஒன்றை இழுத்துச்செல்கின்ற ஒரு முறைமையல்ல. இது ஒரு தரமான மற்றும் மனிதாபிமான மற்றும் நவீன உலகை வெற்றிகொள்ளக்கூடிய ஒரு நபரை உருவாக்கும் கல்வி சீர்திருத்தமாகும.

கல்வியின் தரம் ஆசிரியர்களிலேயே தங்கியுள்ளது, நாம் எதிர்பார்க்கும் இலக்கை அடைய ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். உலகில் சிறந்த கல்வியை நம்மால் கொண்டு வர முடியும், நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வர முடியும், ஆனால் அனைத்தின் இறுதி முடிவு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தரம் மற்றும் மனித உறவுகளின் வலிமையினாலேயே தீர்மானிக்கப்படுகிறது.

இதுவரை நடைமுறையில் இருந்த கல்விச் சீர்திருத்தங்களில் மறந்து போன விடயம் என்னவென்றால், ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் அறிவும் அளிக்கும் திட்டம் எதுவும் அவற்றில் இருக்கவில்லை என்பதுதான்.

பயிற்சி மற்றும் அறிவு மூலம் ஆசிரியர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதே எங்கள் முதன்மையான கவனமாகும்.

இன்றைய சமூகத்தில் ஒரு ஆசிரியருக்கு உள்ள அங்கீகாரம் பற்றியோ அல்லது ஆசிரியர் தொழிலை நீங்கள் தேர்ந்தெடுத்ததை பற்றியோ நீங்கள் திருப்பதியடைய முடியுமான நிலை உள்ளதா?

ஆசிரியர் தொழில் என்பது ஒரு பிள்ளையின் எதிர்காலத்தை உருவாக்கும் அல்லது அழிக்கும் ஆற்றல் கொண்ட ஒரு தொழில்.  நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த, அத்தகைய சக்தியும், வலிமையும், பொறுப்பும் கொண்ட ஆசிரியர்கள் இந்த நாட்டில் பிறக்க வேண்டும். ஆனால் அத்தகைய கல்வியைப் பெறுவதற்கான சூழல், வளங்கள் அல்லது உட்கட்டமைப்பு கல்விக் கல்லூரிகளில் உள்ளதா?  இன்று நான் இந்தக் கல்லூரியில் ஒரு கண்காணிப்பை மேற்கொள்கிறேன், அந்த நிலை இருக்கிறதா என்று பார்ப்போம்.

கல்விக் கல்லூரிகள் மூலம் பட்டங்கள் வழங்குவது பற்றி ஒரு கருத்தாடல் இருப்பது பற்றி நான் அறிவேன். அதனை பெயர் பலகையை மாற்றுவதன் மூலமும் செய்யலாம். கடந்த காலங்களில் இப்படி நடந்துள்ளது. ஆனால் அதன் உள்ளடக்கத்தின் தரம் உள்ளதா என்பதுதான் பிரச்சினை என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *