மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையான அனைத்து துறைகள் சார்ந்த வழிகாட்டுதலை வழங்கும் சத்திய மார்க்கமான இஸ்லாம் இரண்டு உள்ளங்களின் உணர்வின் வெளிப்பாடான காதலுக்கும் தெளிவான வழிகாட்டியுள்ளது என்பதை இந்த புத்தகம் மூலம் ஆழமான ஆதாரங்களுடன் விரிவாக எடுத்தியம்பியுள்ளார் நூலாசிரியர்.
“பேசத்தயங்கும் கருப்பொருள் காதல்”
எனும் நூலின் தலைப்பே சொல்கிறது இஸ்லாமிய சமூகத்தில் இதுவரை இந்த தலைப்பு குறித்து எழுதுவதற்கு அல்லது பேசுவதற்கு எப்போதும் தயக்கம் இருந்து வந்துள்ளது.
அதைக் களையும் வகையில் காதல் என்பது என்ன?
காதல் எப்படிப்பட்ட உணர்வு?
காதலுக்கான உண்மை அர்த்தம் என்ன?
காதல் எப்படி இருக்க வேண்டும்?
காதல் திருமணத்திற்கு முன்னரா அல்லது திருமணத்திற்கு பின்னரா?
என்று பல்வேறு விஷயங்கள் நூலில் அலசப்பட்டுள்ளது…
திருமறை வசனங்கள், நபிமொழிகள், நபித்தோழர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை மேற்கோள் காட்டிய நூலாசிரியர் காதல் எனும் உணர்வை இப்படியும் ஒரு கோணத்தில் பார்க்கலாம் என்று புரிய வைக்கிறார்.
காதல் என்ற பெயரில் அத்துமீறும் அநாச்சாரங்களில் இருந்து சமூகத்தின் இளைய தலைமுறையை காக்க வேண்டும் என்றும், கற்பொழுக்கம் மிக்க சமூகம் உருவாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும், எல்லை மீறுவதிலிருந்து ஒழுக்க விழுமியங்களை பெண்கள் முதன்மையாக கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் இந்த நூலில் வலியுறுத்தியுள்ளார்.
சமீப காலங்களில் காதலிக்கும் ஆணை அல்லது பெண்ணை திருமணம் முடிப்பதற்காக முர்தத் ஆகும் தலைமுறை அதிகரித்து வருவதும், தங்கள் பிள்ளைகளை இழப்பதை விட பிள்ளை இஸ்லாமிய வாழ்வியல் துறக்கும் முடிவுக்கு வேறு வழியின்றி கனத்த இதயத்துடன் சம்மதம் தெரிவித்து அவர்கள் விரும்பும் வழியில் திருமணம் முடித்து வைக்கும் பெற்றோரும் அதிகரிக்கும் சூழலில் இந்த புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது,