இந்தியாவின் (India) குஜராத் மாநிலத்தில், இந்திய கடலோர பொலிஸாருக்கு சொந்தமான உலங்குவானூர்தி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
குறித்த விபத்து, (05.01.2025) இந்தியாவின் போர்பந்தர் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்திய கடலோர பொலிஸாரின் இலகுரக உலங்குவானூர்தி (ALH) மூன்று பணியாளர்களுடன் போர்பந்தர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதை அருகே விழுந்து தீப்பிடித்துள்ளது.
மூவர் உயிரிழப்பு
இந்நிலையில், விபத்தில் சிக்கிய மூன்று பணியாளர்கள், எரிந்த நிலையில் மீட்கப்பட்டு போர்பந்தரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் இருவர் ஏற்கனவே இறந்துள்ளதுடன் மீதமுள்ளவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையே, விமான நிலையத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இந்திய கடலோர பொலிஸாரின் ALH MK-III ரக உலங்குவானூர்தி, போர்பந்தரில் இருந்து புறப்பட்டு அரேபிய கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் ஏற்பட்டு நான்கு மாதங்கள் ஆகிய நிலையில் மீண்டும் அவ்வாறானதொரு விபத்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.