ஒவ்வொரு வாலிபனின் ஆசையும் தனக்கென ஒரு அழகான மனைவி வாய்க்க வேண்டும், அதன் மூலம் அவன் தன் உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் ஊரவர்கள் முன்னிலையில் பெருமைப்பட வேண்டும் என்பதுதான்.
ஒவ்வொரு யுவதியின் ஆசையும் தனக்கென ஒரு அழகான கணவன் வாய்க்க வேண்டும், அதன் மூலம் அவள் தன் உற்றார், உறவினர், நண்பிகள், மற்றும் ஊரவர்கள் முன்னிலையில் பெருமைப்பட வேண்டும் என்பதுதான்.
பின்னர் என்ன…! மேளதாளம் தட்ட ஆடல் பாடலுடன் ஊரே பார்க்க கலியாணம் வைபவம் பிரமாண்டமாக விழாக் கோலம் காண வேண்டும்.
இவன், தான் எதிர்பார்த்த கனவு நாயகி வாய்த்த மயக்கத்தில் இருப்பான். அவள் தான் எதிர்பார்த்த கனவு நாயகன் வாய்த்த மயக்கத்தில் இருப்பான்.
அடுத்த கட்டங்கள் எப்படி அமையப் போகின்றன என்றோ, அடுத்தடுத்த பொறுப்புக்கள் என்ன என்வென்றோ யாரும் யோசிப்பதில்லை.
இப்படி அப்பாவித்தனமாக பகல் கனவுகளோடு மாத்திரம் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்த எத்தனையோ பல தம்பதிகளின் இல்வாழ்வின் சோகமான முடிவுகளை நான் பார்த்திருக்கிறேன்.
முதல் முதலாக அவள் கர்ப்பமாகி வாந்தி எடுப்பதைக் காணும் போதே, இவன் சலித்துக் கொள்ள ஆரம்பிப்பான்.
அல்லது பகல் போசனம் சற்று தாமதமாகி விட்டது என்பதற்காக கடிந்து கொள்ள ஆரம்பிப்பான்.
ஒரு நாள் இவன் சற்று தாமதமாக வீடு வந்ததைத் கண்டு அவள் முணுமுணுக்க ஆரம்பிப்பாள்.
அல்லது தொழில் அழுத்தத்தில் இருந்த இவனிடமிருந்த தவறுதலாக வந்து ஒரு வார்த்தைக்காக அவள் மனமுடைந்து உறங்கச் சென்றுவிடுவாள்.
இப்படியே போகப் போக குடும்ப வாழ்வில் பிரச்சனைகளும் பொறுப்புக்களும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
அப்போதுதான் இருவருக்கும் தெரியவரும்.
தாம்பத்தியம் என்ற தொடர் பயணம் என்பது வெறுமனே நுவரெலியாவுக்கோ அல்லது கொடைக்கானலுக்குகோ தேனிலவு கழிக்கச் செல்வதோடு முடிந்து விடும் ஒரு சாதாரண பயணமல்ல என்றும்,
மாறாக இமாலய சுமைகளோடும் அடுக்கடுக்கான பொறுப்புக்களோடும் தொடர வேண்டிய தியாகப் பயணம் என்றும் தெரியவரும்.
இதனால்தான் இன்று விவாகங்கள் நடக்கும் அதே வேகத்தில் விவாக ரத்துக்குளும் நடந்த வண்ணம் உள்ளன.
இளைஞர்களே…! யுவதிகளே…!
யாருக்கும் எப்போதும் திருணம வாழ்க்கை ரோஜா மலர்கள் தூவப்பட்ட பட்டுப் பாதையாக இருக்கப் போவதில்லை, மாறாக ரோஜா மலர்களோடு முட்கள் தூவப்பட் பாதையாகவே இருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.