ஷாக் கொடுத்த மம்மி கல்லறைகள்

ByEditor 2

Dec 22, 2024

பிரமிடுகள் அதிகம் உள்ள எகிப்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில், தங்கத்தால் ஆன நாக்கு மற்றும் விரல் நகங்கள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன.எகிப்தின் கெய்ரோவிலிருந்து 200 கி.மீ தொலைவில் ஆக்சிரைஞ்சரஸ் என்கிற இடம் இருக்கிறது. நைல் நதியின் கரையோரம் உள்ள இந்த இடத்தில் சில நாட்களுக்கு முன்னர் ஆய்வாளர்கள் அகழ்வாய்வை மேற்கொண்டனர். இதில்தான் தங்க நாக்கு, நகம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மொத்தம் 13 மம்மி சடலங்களை அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

எகிப்து நாட்டை பொறுத்தவரை, உயிரிழந்த அரசர் அல்லது அவருக்கு இணையான செல்வாக்கு கொண்டவர்களை விரிவான சடங்குகள் செய்து புதைப்பார்கள். ஒரு பெட்டியை தயாரித்து அதில் உயிரிழந்தவர்களின் உடலை வைத்து, உடன் அவர்கள் பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் வைப்பார்கள். தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள், விலை உயர்ந்த துணிகள் என எல்லாம் சேர்த்து புதைக்கப்படும். இப்படி செய்வதன் மூலம் உயிரிழந்தவர்கள் மீண்டும் கடவுளிடம் உயிர்த்தெழுவார்கள் என்று எகிப்து மக்கள் நம்பி இருந்தார்கள்.மரணமடைந்தவர்கள் உயிருடன் வரும்போது அவர்களுக்கு தேவையானவை அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படியான பொருட்கள் புதைக்கப்பட்டு இருக்கின்றன. எனவேதான் இவை மம்மிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் சில காலம் கழித்து, கொள்ளையர்கள் இப்படி புதைக்கப்பட்ட பல பொருட்களை திருடி சென்று விட்டனர் என்பது தனிக்கதை.தற்போது எகிப்து அரசு மம்மிகள் புதைக்கப்பட்ட இடங்களை கண்டறிந்து அகழ்வாய்வு செய்து, அதில் கிடைக்கும் பொருட்களை பத்திரப்படுத்தி வருகிறது. இப்படியான ஆய்வில்தான் தற்போது தங்க நாக்கு கிடைத்திருக்கிறது. தங்க ஜாடி, தங்க வளையல், தங்க கைப்பிடி இதெல்லாம் ஓகேதான். ஆனால் ஏன் தங்கத்தால் நாக்கு செய்யப்பட்டது? என்று பலருக்கும் கேள்வி எழுந்திருந்தது. இதற்கு அந்நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்கள் பதில் அளித்துள்ளனர்.அதாவது எகிப்தியர்களை பொறுத்தவரை தங்கம் என்பது கடவுளின் மேல் தோலை போன்றது. இறந்தவர்கள் அனைவரும் கடவுளிடம் உயிர்த்து எழுவார்கள். அப்போது கடவுளிடம் சாதாரண நாக்கை வைத்து பேச முடியாது. எனவேதான் தங்கத்தால் ஆன நாக்கை கல்லறையில் புதைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். இந்த கல்லறைகள் அனைத்தும் சுமார் 2030-2304 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மொத்தம் 16 தங்க நாக்குகள் கிடைத்திருக்கிறது.நாக்குகள் தவிர தங்கத்தால் ஆன விரல் நகங்கள் கிடைத்துள்ளன. உயிரிழந்த அரசர்கள் கடவுளிடம் செல்லும்போது அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக தங்க நகங்களையும் சேர்த்து புதைத்திருக்கலாம். இது தவிர தங்க தாயத்துகள், ஸ்கிராப் வண்டுகளின் உருவம் ஆகியவை கிடைத்திருக்கிறது. இதெல்லாம் தெய்வ வழிபாட்டிற்கானதாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இத்துடன் ஓவியங்கள் சிலவும் கிடைத்துள்ளன. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது எகிப்தியர்கள் மறுஜென்மத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *