Alzheimer’s disease: மூளை தொடர்பான நோய்

ByEditor 2

Dec 21, 2024

பொதுவாகவே மனிதனின் நிகழும் அனைத்து விதமாக உணர்வுகளையும் மூளை தான் உடலுக்கு உணர்த்துகின்றது. 

அந்த வகையில் மனித மூளையானது விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தும்  பிரதான தொழிலை செய்கின்றது.

உதாரணத்துக்கு புறசூழலில் ஏற்படுகின்ற மாற்றங்களான வெளிச்சம், இருள், சூடு, குளிர் என எதை நமது உடல் உணர வேண்டும் என்றாலும் அதற்கு மூளையின் உதவி அவசியமாகின்றது. 

நமது கண்கள் பார்ப்பது என்ன என்பதையே மூளைதான் உணரச்செய்கின்றது.மனித மூளை பல நூறு கோடி நரம்பு செல்களால் ஆனது. அவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன.

இந்தத் தொடர்பில் ஒன்று துண்டிக்கப்பட்டாலும் நமது செயல்கள் மாறிப்போகும் அல்லது இல்லாமல் போகும். அப்படி வருவதுதான் அல்சைமர் எனப்படும் நோய்.

அல்சைமர் என்றால் என்ன?

மூளை தொடர்பான ஒரு தீவிர நோயாகும். அதனை அதீத மறதி நோய் எனவும் சொல்லலாம் அல்சைமர் நோயால் டிமென்ஷியா அபாயமும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அல்சைமர் நினைவாற்றல், சிந்தனை, கற்றல் மற்றும் ஒழுங்கமைக்கும் திறன் ஆகியவற்றில் முற்போக்கான வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.அதனால் அன்றாட வாழ்வில் பல்வேறு வகையிலும் சவால்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். 

இது குறித்த சரியான தகவல் இல்லாததன் காரணமாக அல்சைமர் ஒரு மறதி நோய் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் நினைவாற்றல் இழப்பு தவிர, அல்சைமர் காரணமாக பல தீவிர பிரச்சனைகள் ஏற்பட வாய்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

அல்சைமர் எப்படி பாதிக்கின்றது?

அது ஒரு தீவிர மறதி நோயாக அறியப்படுகின்றது. நமது மூளைக்கு சிக்னல்களைக் கொண்டு சேர்ப்பதற்கும் மூளையின் கட்டளைகளை உடலெங்கும் பரப்புவதற்கும் சில வேதிப் பொருள்கள் இன்றியமையாதது.

இந்த வேதிப்பொருள்கள்தான் மூளையின் பிரதிநிதிகளாக செயற்படுகின்றது. ஆனால் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வேதிப் பொருள்கள் சரியான விகிதத்தில் இருக்காது. அதனால் மூளையின் ‘ஹிப்போகேம்பஸ்’ எனப்படும் பகுதி பாதிப்படைந்து குறுகிய கால நினைவாற்றலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

ஹிப்போகேம்பஸ்’ மூளையின் ஒரு பகுதிதான், அல்சைமர் நோயின்போது பாதிக்கப்படுகிறது. இது வாழ்க்கையில் அன்றாடம் நடக்கக்கூடியவற்றை நினைவில் கொள்ளும் பகுதி. ஆனால் நீண்ட காலத்துக்கு முன்பு நடந்தவைகள் இந்த நோயால் தாக்கத்துக்கு உள்ளாக்கப்படுவது இல்லை. 

அல்சைமர் – டிமென்ஷியா என்ன வேறுபாடு?

டிமென்ஷியா என்பது குறிப்பாக ஒரு நோய் தொடர்பில் குறிப்பிடப்படுவது கிடையாது.  பல வகையான மறதி, மூளை தொடர்புடைய நோய்களை மொத்தமாகக் குறிக்கும் ஒரு சொல்தான் டிமென்ஷியா.

அதில் ஒரு வகையாகவே அல்சைமர் குறிப்பிடப்படுகின்றது. டிமென்ஷியாவில் பல்வேறு வகையான நோய்கள் இருக்கின்றன. சில நேரங்களில் வேறு வகையான மறதி சம்பந்தமான நோய்களும் அல்சைமர் என தவறாகக் கண்டறியப்படும் வாய்ப்பு காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

 உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின் பிரகாரம் சுமார் டிமென்ஷியா வகையில் 70 சதவிகிதம் பேர் அல்சைமர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிடப்டுகின்றது.

அல்சைமரின் முக்கிய அறிகுறிகள் 

எந்த ஒரு விடயத்தையும் விரைவாக மறந்துபோவது, புதியவற்றைக் கற்றுக் கொள்வதில் சிக்கல் போன்றவைதான் அல்சைமர் நோயின் தொடக்கநிலை அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

அல்சைமரின் நோயால் பாதிக்கப்பட்ட  அனைவருக்கும் ஒருமாதிரியான அறிகுறிகள் இருக்கும் என குறிப்பிட முடியாது.  உதாரணத்துக்கு வீட்டில் சாவியை ஒரு இடத்தில் வைத்து வீட்டு தேடுவது, சமையல் செய்யும்போது அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என மறந்து போவது போன்றவற்றை குறிப்பிடலாம். 

இன்னும் சிலருக்கு திருமண நாள், பிறந்தநாள் போன்றவை மறந்துபோவதும், நண்பர்களின் பெயர்களை நினைவுபடுத்திக்கொள்ள இயலாத நிலை ஏற்படுவது போன்ற அறிகுறிகள் ஏற்படும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *