வாய் உள்ள பிள்ளை எங்கும் எப்படியும் பிழைத்துக்கொள்ளும்

Byadmin

Oct 21, 2024

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். ‘அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்’ என்றான்.

மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.
மகாராணி கொதித்து விட்டார். ‘ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?’ அதை திரும்ப வாங்குங்கள் என்றாள்.
‘முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல’ என்று மன்னர் மறுத்தார்.

‘சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள்.
ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள்.
எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்’ என்றாள் மகாராணி.

மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தாள்.
அவன் உஷாராக பதில் சொன்னான் ‘இது ஆணுமில்லை பெண்ணுமில்லை’ இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன்.
அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான்.

இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.
அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான்.
மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.
‘பேராசைக்காரன்…! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்’ என்றாள் மன்னரிடம்.

அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்…’நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி!
அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால்கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது’ என்றான்.

இதனால் இன்னும் மனம் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.
இப்பொழுது மகாராணி தனது வாயை மூடிக் கொண்டாள்.

வாய் உள்ள பிள்ளை எங்கும் எப்படியும் பிழைத்துக்கொள்ளும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *