ரவூப் ஹக்கீமுக்கு எதிராக தடை உத்தரவு

Byadmin

Aug 29, 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதைத் தடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகத்திற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (28) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அலி சாஹிர் மௌலானாவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டினை ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோருக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு வரும் 11ம் திகதி வரை அமுலில் இருக்கும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கடந்த ஓகஸ்ட்மாதம் 4ஆம் திகதி கூடி தீர்மானித்தது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானித்திருந்த உயர்பீடக் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என்றும், ஆனால் அந்த முடிவு தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், தாம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சுமத்தி, எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் இன்றி தமது கட்சி உறுப்புரிமையைப் பறிக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *