SLMC தலைவராக ஹக்கீம் ஏகமனதாக தெரிவு – முழு நிர்வாகிகளின் விபரம்

Byadmin

Jun 23, 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 கட்சியின் 31 வது தேசிய பேராளர் மாநாடு ,காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்ற போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்  தலைவராக ரவூப் ஹக்கீம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டி ருப்பதை கட்சியின் தவிசாளர் முழக்கம் ஏ. எல் .அப்துல் மஜீத் மாநாட்டில் அறிவித்தார் .

பிரஸ்தாப பேராளர் மாநாடு மௌலவி காரி அப்துல் ஜப்பாரின் கிராஅத்துடன் ஆரம்பமானது. 

தக்பீர் முழக்கம், கரகோஷங்களுக்கு மத்தியில் தலைவர் ஹக்கீம் மாநாட்டுக்குத் தலைமை வகித்து கட்சியின் 33 பேர் அடங்கிய  பதவிவழி உத்தியோகத்தர்களின் பெயர்களை அறிவித்தார்.

கட்சியின் பிரதித் தலைவர்களாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல் .ஏ எம் .ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான செய்யித் அலி சாஹிர் மௌலானா,சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கட்சியின் ஸ்தாபகப் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எஸ். எம் ஏ .கபூர் ,யூ.ரீ.எம் அன்வர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தவிசாளராக முழக்கம்  ஏ.எல்.அப்துல் மஜீத், செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பிரதிச் செயலாளராக மன்சூர். ஏ .காதிர், தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், பொருளாளராக ரஹ்மத் மன்சூர் ,பிரதி அமைப்பாளராக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை, தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக யூ.எல்.எம்.எல். முபீன் ,சர்வதேச நாடுகளுக்கான இணைப்பாளராக சிராஸ் மீரா சாஹிப், பிரதி பொருளாளராக ஏ.சீ.யஹ்யா கான் ஆகியோர் உட்பட 33 பேரையும் தலைவர் அறிவித்தபோது,
அதனை தக்பீர் முழங்கி பேராளர்கள் அங்கீகரித்தனர்.

 இந்த பேராளர் மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டி ருந்தார் .

இந்த மாநாட்டில்1500 அளவிலான பேராளர்கள் பங்கு பற்றினர்.அவர்களில் பலர் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் போதிய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

 தலைவர் ஹக்கீம் இரண்டாவது அமர்வில் முக்கிய உரையை ஆற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *