இந்தியரின் இதயத்துடன் உயிர்வாழும் பாகிஸ்தான் பெண்

Byadmin

Apr 28, 2024

இந்தியா, பாகிஸ்தான் குறித்து பேசும் போது எமது நினைவலைகளில் சிறந்த விடயங்கள் எதுவும் புரையோடுவதில்லை.

இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை மற்றும் அரசியல் காரணங்களால் அதிகரிக்கும் பிரச்சினைகள் சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன 

ஆனாலும், ஆறுதலான செய்தியொன்று அண்மையில் வௌியானது. 

 ஆயிஷா ரஷான் பாகிஸ்தான் – கராச்சியை சேர்ந்த 19 வயதான இளம்பெண் .

ஆயிஷா நீண்ட நாட்களாக மாரடைப்பால் அவதியுற்று வந்துள்ளார்.

அவருடைய உடல்நிலை சீராக  இல்லாமையால், விரைவில் இதய மாற்று அறுவை சிகிச்சையை முன்னெடுக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சைக்கு 35 இலட்சம் ரூபா செலவாகும். எனினும், ஆயிஷாவின் தாயால் அந்த செலவை ஈடு செய்ய முடியவில்லை.

மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் சந்தர்ப்பத்தில் , அவளைக் காப்பாற்றும் முயற்சியின் ஒரு அங்கமாக , இரத்தத்தைப் பாய்ச்ச உதவும் இடது வென்ட்ரிக்குலர் (ventricular) சாதனத்தை வைத்தியர்கள் பொருத்தினர். அந்த முயற்சியும் கைகூடவில்லை.

இறுதியாக , ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்தினர். 

ஆயிஷாவுக்கு சிகிச்சையை மேற்கொள்ள இந்தியா பயணமாகினர்.

இந்தியாவின் சுகாதார விதிமுறைகளின் படி, வௌிநாட்டுப் பிரஜையொருவருக்கு தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளைப் பெறுவது கடினமாகும். 

எதிர்பாராத விதமாக ஆயிஷாவுக்கு மாற்று இதய அறுவை சிகிச்சைக்காக டெல்லியைச் சேர்ந்த ஒருவரின் இதயம் கிடைக்கப்பெற்றது.

69 வயதான உயிரிழந்த இந்தியர் ஒருவரின் இதயம் அது.

மனிதநேயத்திற்கு  இன, மத பேத வேறுபாடுகள் இல்லையென்றாலும், இந்தியாவும், பாகிஸ்தானும் எப்போதுமே  நட்புறவைப் பேண விரும்பாத இரண்டு நாடுகள்.

மூளைச்சாவு அடைந்த ஒரு நோயாளியிடமிருந்து பெறப்பட்ட இதயத்தைக் கொண்டு இந்திய வைத்தியர்கள் ஆயிஷாவுக்கு இலவசமாக இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

மேலும், சென்னையிலுள்ள ஒரு நிறுவனம் ஆயிஷாவுக்கு தேவையான நிதியுதவியை வழங்கியது. 

ஆயிஷாவுக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் பாலகிருஷ்ணன் பின்வருமாறு கருத்து தெரிவித்தார், 

”அவள் சிறு குழந்தை , அவள் என்னுடைய மகள் போன்றவள்.  ஒவ்வொரு உயிரும் முக்கியமானது. உலகிலுள்ள அனைவரின் வாழ்க்கையையும் எம்மால் மாற்ற முடியாது. ஆனால், எம்மை நாடி வருபவர்களின் வாழ்க்கையை மாற்ற முடியும்.”

ஆயிஷாவும் அவருடைய குடும்பத்தினரும் மருத்துவர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தமது நன்றிகளைத் தெரிவித்தனர். 

இந்தியரின் இதயத்துடன் ஆயிஷா இன்று நலமாக இருக்கின்றாள்! 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *