றிகோல் இன்றும் எனது கண்முன்னே வந்துகொண்டே இருக்கிறது. போட்டியின்போது எனக்கு பந்து கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் பங்களாதேஷ் கோல்காப்பாளர் 18 யார் எல்லையில் இருப்பதை கவனித்தேன். உடனடியாக மின்னல் வேகத்தில் நான் பந்தை உயர்த்தி உதைத்து கோலினுள் புகச் செய்தேன். அதைத்தான் எனது வாழ்நாளில் சிறந்த கோலாக கருதுகிறேன்’ என நினைவுகூர்ந்தார்.
அந்தப் போட்டியை பங்களாதேஷில் தொழில்புரியும் மற்றும் உயர்கல்வி கற்கும் இலங்கையர்களில் 5000 பேர் கண்டு களித்ததாகவும் அறியக் கிடைத்தது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை வம்சாவளி வீரர்கள் இலங்கை அணியில் இடம்பெறுவது எந்தளவு பலன்தரும் எனக் கேட்டபோது,
‘இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் இப்போதுதான் சரியான திசையில் செல்கிறது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை வம்சாவளியினரை இணைத்துக்கொண்டு விளையாடுவதன் மூலம் சர்வதேச தரவரிசையில் இலங்கையினால் முன்னேற முடியும். அவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் அவர்கள் இலங்கையர்களே. அவர்களுடன் இணைந்து விளையாடும்போது இங்குள்ள வீரர்களுக்கு சிறந்த அனுபவம் கிடைப்பதுடன் நிறைய நுட்பங்களைக் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் வெகுவிரைவில் இலங்கை கால்பந்தாட்டம் உலக தரவரிசையில் முன்னேறும் என நம்புகிறேன்’ என்றார்.
சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து வெற்றியுடன் விடைபெற்ற பஸாலிடம் எதிர்கால குறிக்கோள் என்னவென கேட்டபோது,
‘இன்னும் சில வருடங்கள் கழக மட்டத்தில் விளையாட விரும்புகிறேன். அதன் மூலம் எனது அனுபவத்தை ஏனைய வீரர்களுடன் பகிர்ந்துகொண்டு அவர்களை சிறந்த வீரர்களாக உயர்த்துவேன்.
‘நான் பாணந்துறையில் கால்பந்தாட்டப் பயிற்சியகம் ஒன்றை எனது வாப்பா, எனது இளைய சகோதரன் பாஹிர் நைஸர் ஆகியோருடன் இணைந்து நடத்துகிறேன். பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் பயிற்சிகளில் ஈடுபடும் சிறுவர்களை சிறந்த வீரர்களாக தரமுயர்த்துவதே எமது குறிக்கோளாகும். எமது பயிற்சியகத்தில் உருவாகும் சிறந்த வீரர்களை ஸாஹிரா, ஹமீத் அல் ஹுசெய்னி ஆகிய கல்லூரிகளில் இணைத்துவருகிறோம். அது எமக்கு மன ஆறுதலையும் திருப்தியையும் தருகிறது’ எனக் கூறினார்.
பஸாலுக்கு வழங்கப்பட்ட பிரியாவிடை குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை அணித் தலைவர் சுஜான் பெரேரா, ‘பஸாலின் மனதை குளிரவைக்கும் வகையில் பிரியாவிடை வழங்கவேண்டும் என நாங்கள் எண்ணினோம். அவர் எப்போது களம் புகுவார் என நான் எதிர்பார்த்த வண்ணம் இருந்தேன். அவர் களம் புகுந்ததும் எனது சிரேஷ்ட வீரரான அவரை கௌரவிக்கும் வகையிலேயே தலைவருக்கான கைப்பட்டியை அவருக்கு அணிவித்தேன். அவரைப் போன்ற சிறந்த, பண்புள்ள வீரருக்கு இந்த பிரியாவிடை உகந்ததாகும்’ என தெரிவித்தார்.