20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்க திட்டம்

Byadmin

Jan 13, 2024

சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 106% அதிகரித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே,

“கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது தற்போது சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ளது. சுமார் மூன்று வருடங்களாக பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த சுற்றுலாத்துறை இன்று ஓரளவு ஸ்திரமான நிலைக்கு வந்துள்ளது. 2023 டிசெம்பர் இறுதியில் 106 % சுற்றுலாத்துறையில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.

இவ்வருடம் மேலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இன்னும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்கவும் அவசியமான பணிகளை நாம் தற்போது மேற்கொண்டு வருகின்றோம். 2023 ஆம் ஆண்டில் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைப்பதே எமது இலக்காக இருந்தது. நாம் அந்த இலக்கை ஓரளவுக்கு அடைந்துகொண்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட வேண்டும். இவ்வருடம் எமது இலக்கு குறைந்தது இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு அழைத்து வருவதாகும். அதன் ஊடாக 06 பில்லியன் டொலர் வருமானம் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக, சுற்றுலாத் தளங்களின் பிரவேசப் பத்திரங்களுக்கான கட்டணங்கள் அதிகரித்திருக்கின்றமை தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். வற் வரி எவ்வளவு தூரம் எமது சுற்றுலாத் துறையில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பது குறித்தும் சுற்றுலாத் துறைக்கு இந்த வற் வரி தொடர்பில் நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் சுற்றுலாத் துறை அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடுகின்றார். அந்தப் பணிகள் வெற்றியடையும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை தற்போது ஆரம்பித்துள்ளதுடன் அவற்றை இவ்வருட இறுதியில் நிறைவு செய்யவும் எதிர்பார்த்துள்ளோம். உதாரணமாக எல்ல, பண்டாரவளை, நீர்வீழ்ச்சிகள் மற்றும் இராவணன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதை போன்ற பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய ஆரம்பித்துள்ளோம். அதேபொன்று தென்பகுதி உட்பட நாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்நாட்டுக்கு டொலர் கொண்டு வரும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி உட்பட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. எதிர்காலத்திலும் அவ்வாறே அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். எமது பணிகள் வெற்றியடையும் என்று நாம் எதிர்ப்பார்க்கின்றோம்” என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மேலும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *