கடந்த வியாழக்கிழமை பொத்துவிலின் தாழ்நில பிரதேசங்கள் அனைத்தும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வெள்ள நீர் நிரம்பியிருந்தது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பொத்துவில் – கொழும்பு, பொத்துவில் – அக்கறைப்பற்று வழியான போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தன.
இந்த வழியால் செல்லும் வாகனங்களை குறிப்பிட்ட சில இடங்களில் அவதானமாக செலுத்தி செல்லுமாறும் இராணுவத்தினரால் சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இப்படியான ஒரு நிலையில்தான் அறுகம்பையில் இருந்து சியம்பலாண்டுவ செல்வதற்காக ஒரு வெளிநாட்டு பயணி ஆட்டோ ஒன்றை வாடகைக்கு பேசியிருக்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று எண்ணி அந்த சாரதி அறுகம்பையில் இருந்து சியம்பலாண்டுவை செல்வதற்காக 10000/= வாடகை கேட்டிருக்கிறார்.
அந்த வெளிநாட்டு பயணி திடுக்கிட்டு தனது தொலைபேசியை எடுத்து தூரத்தை பார்க்கவும் அது 35Km தூரத்திற்குள் காட்டியிருக்கிறது இந்த தூரத்திற்கு இவ்வளவு தொகை அதிகம் என எண்ணிய பயணி வேறொரு ஆட்டோவை நாடி சென்றிருக்கிறார் உடனே இந்த சாரதி குறுக்கால் பாய்ந்து நான் பத்தாயிரம் கேட்டிருக்கிறேன் நீயும் பத்தாயிரம் கேள் என சொல்லவும் அந்த சாரதியும் பத்தாயிரம் கேட்க வேறு வழியில்லாமல் அந்த பயணி முதன் முதலில் பேசிய ஆட்டோவில் ஏறி பயணித்திருக்கிறார்.
இருந்தாலும் அந்த பயணியின் மனதில் சிறு நெருடல் இந்த சிறு தொலைவுக்கு இவ்வளவு தொகை கேட்டுவிட்டார் என. சியம்பலாண்டுவை கொண்டு பயணியை இறக்கி விட்டதும் அந்த பயணி தனது பெர்சில் எப்போதோ மடித்து வைத்திருந்த ஒரு லட்சம் இந்தோனேசியா ருப்பியா தாள் ஒன்றை நீட்டி டேக் இட் என்றவுடன் இவர் தொகையை பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டு விட்டது.
அடடா ஒரு லட்சம் தந்திருக்கிறானே மகராசன் என்று சந்தோசப்பட்டிருக்கிறார் பயணி சொல்லியிருக்கிறார் என்னிடம் சேஞ் இல்லை இந்த தொகையை நீ மாற்றி எடுத்துக்கொள் என்று. ஆட்டோ சாரதிக்கு உண்மையில் இந்தோனேசிய ருப்பியாவின் இலங்கை பெறுமதி தெரிந்திருக்கவில்லை அந்தளவிற்கு கல்வியறிவும் அவருக்கு இல்லை.
ஏற்கனவே சுற்றுலா பயணிகளிடம் டொலர், யூரோ, பவுன்ட் என்று வாங்கி பழகியவருக்கு இந்த ஒரு லட்சம் தொகையும் பெரிதாக தோன்றவே பயணிக்கு நன்றி கூறிவிட்டு மிகுந்த சந்தோச்துடன் திரும்பி வந்துவிட்டார்.
இங்கு வந்து சக நண்பர்களிடம் தன் வீரதீர செயலை கூறி தன்னைத்தானே மெச்சிக்கொள்ளவும் கூட இருந்த விசயம் தெரிந்த நண்பன் ஒருவன் சொல்லியிருக்கிறான் அடே மடையா நீ அவனை ஏமாற்றியதாக எண்ணிக்கொண்டிருக்கிறாய் உண்மையில் அவன்தான் உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டு சென்றிருக்கிறான்.
அவன் தந்திருக்கும் ஒரு லட்சம் இந்தோனேசிய ருப்பியாவின் இலங்கை பெறுமதி வெறும் 2063 ரூபா தான் அதையும் கூட இங்கு மாற்றியெடுப்பது கஷ்டம் என கூறவும் ஆளுக்கு மயக்கம் வராத குறை.
நாம் ஒருவனை ஏமாற்றி விட்டதாக எண்ணிக்கொண்டிருப்போம் ஆனால் உண்மையில் நாம்தான் ஏமாந்திருப்போம் இந்த ஆட்டோ சாரதியை போல ஆகவே யாரையும் ஏமாற்றி பிழைக்காமல் எதையும் ஹலாலாக உழைத்து அதன் மூலம் வாழ பழகிக்கொள்வோம் அது கொஞ்சமாக இருந்தாலும் சரி.