நாளைய தினமும் வேலைநிறுத்தம்!

Byadmin

Jan 10, 2024

வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகள் மற்றும் கனிஷ்ட நிலை சுகாதார ஊழியர்கள் ஒன்றிணைந்து நாளை (11) காலை 6 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டடம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணி இன்று காலை 8:00 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளது.
இதனால், டெங்கு, தட்டம்மை தடுப்பு திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வைத்தியர்களுக்கான DAT கொடுப்பனவை 35,000 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்திய ஊழியர்கள் நேற்று காலை ஆரம்பித்த 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் இன்று காலை முடிவடைந்தது.
எவ்வாறாயினும், இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணி இன்று காலை 8 மணியளவில் தனது சேவைகளை விட்டு வெளியேறி, 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், இலங்கை கண் வைத்திய நிபுணர்கள் சங்கம், அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கம், மருந்து கலவை உத்தியோகத்தர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம் போன்ற 10 தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் இணைந்துக் கொண்டுள்ளன.
 இருப்பினும், குழந்தைகள் மருத்துவமனை, புற்றுநோய் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை, சிறுநீரக மருத்துவமனை, மத்திய இரத்த வங்கி மற்றும் மனநல நிறுவனம் ஆகியவற்றில் இந்த வேலைநிறுத்தம் செயற்படுத்தப்படவில்லை.
வேலை நிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு வந்த நோயாளர்கள் நேற்றும் இன்றும் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
சுகயீன விடுமுறையை அறிவித்து அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கமும் இன்றைய வேலை நிறுத்தத்தில் இணைந்திருந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *