வேறு ஒருவரின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து வாகன விற்பனை மோசடியில் ஈடுபட்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிரிதலே மற்றும் சிலாபம் பிரதேசங்களை சேர்ந்த 25 முதல் 33 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரு பிரதான சந்தேக நபர்களும் 5,310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும், 5,694 மில்லிகிராம் ஹொரைன் போதைப்பொருளையும் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து சொகுசு வேன் ஒன்றும், சிறிய லொறி மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி 2 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது மகனின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி வாகன மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ராகம பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனால் தானும், தனது மகனும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், பல சந்தர்ப்பங்களில் தனது மகனை பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்வதாகவும் குறித்த பெண் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த முறைப்பாட்டினை விசாரணை செய்யுமாறு பொலிஸ் மா அதிபர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், ராகம பிரதேசத்தில் நபர் ஒருவரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி குத்தகைக்கு விடப்படாத வாகனங்கள் கொள்வனவு செய்யப்படுவதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர், போலி பதிவு எண் கொண்ட வாகனத்தில் போதைப்பொருள் கொண்டு செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை நிறுத்தி, விசாரணை செய்த போது போதைப்பொருளுடன் இரண்டு பிரதான சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்பு காவல் உத்தரவுகளைப் பெற்றதன் பின்னர், ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் மற்றும் இந்த மோசடி தொடர்பில் நீண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேகநபர்கள் முகநூலில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் மூலம் இந்த மோசடியினை செய்துள்ளனர்.
நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி வாகனங்களை வாங்கியவர்கள், பணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது ஒரு தொகை பணத்தை செலுத்தி வாகனத்தை பெற்று எஞ்சிய தொகையை தவணையாக செலுத்தலாம் என வரும் விளம்பரங்கள் மூலம் குறைந்த விலையில் அவர்கள் இந்த வாகனங்களை வாங்குகின்றனர்.
அதற்காக ராகம பிரதேசத்தை சேர்ந்த இளைஞரின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தியுள்ளனர்.
பின்னர், அந்த வாகனங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து, அந்த வாகனங்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்தனர்.
கொலன்னாவ பொது மயானத்திற்கு அருகில் இந்த மோசடியில் ஈடுபட்ட மேலும் மூன்று பேர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த 2 முச்சக்கரவண்டிகள், சிறிய ரக லொறி, கார் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த மோசடியில் சிக்கியவர்கள் பாதுக்கை, கடுவலை, கடவத்தை, பாணந்துறை தெற்கு, தங்கொடுவ மற்றும் மிஹிந்தலை பொலிஸ் நிலையங்களிலும், நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களிலும் பல முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடியில் சம்பாதித்த பணத்தை சந்தேகநபர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பெண்களுடன் இருப்பதற்காக பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசித்திரமான வாகன மோசடி சிக்கியது
