TMVக்கு அழைத்துச் செல்லும்படி எனது தந்தைக்கு தினமும் கடிதம் எழுதினேன். பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஒரு மிகவும் சிறந்த பாடசாலை ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வயதில் எனக்கு அப்பாடசாலை பொருத்தமாக இருக்கவில்லை, நான் அதுவரை ஹட்டன் டவுனுக்கு (எனது கிராமம்/ தேயிலை தோட்டத்திற்கு அருகிலுள்ள நகரம்) கூட சென்றதில்லை. 12 வயதில் கொழும்பு எனக்கு புதிய சூழல், அப்பாடசாலையில் என் சக மாணவர்களை (அவர்களில் பெரும்பாலோர் மிகவும் பணக்காரர்கள், மற்றும் “பெரிய உருவம் உடையவர்கள்”), ஆசிரியர்கள், கட்டிடங்கள் மற்றும் சாலைகள், வாகனங்களைப் பார்த்து பயந்தே போனேன். சிறிது காலம் கழித்து சரியாகிவிடும் என்று என் தந்தை நினைத்தார், ஆனால் அவர் தினமும் நான் அழுதுகொண்டே எழுதி அனுப்பும் கடிதங்களை கண்டவுடன் இறுதியில் என்னை கொழும்பில் இருந்து அழைத்து சென்று மீண்டும் புளியாவத்தை TMVக்கே சேர்த்துவிட்டார்.
சாதாரண தோட்ட தொழிலாளியான எனது தந்தை அவரது வரம்பிற்கு மீறி தியாகம் செய்து என்னை பெரிய பாடசாலையில் படிக்க வைக்க நினைத்தார். நான் எப்படியாவது சிறந்த கல்வியை கற்றிட வேண்டும் என அவர் பட்ட கஷ்டங்களை மிகவும் அருகில் இருந்து பார்த்ததாலேயே என் அறிவிற்கு எட்டிய வரையில் என்னால் கல்வியில் சிறந்து பயணித்திட முடிந்தது. என்னை எனது தந்தை படி படி என வற்புறுத்தியதில்லை, மாறாக நான் நீண்ட நேரம் இரவில் கண்முழித்து படிப்பதை பார்த்து என்னை சீக்கிரம் படுக்க சொல்லியே சொல்வார். எனது மிகப்பெரிய பலமே என் தந்தையின் அர்ப்பணிப்பு தான். அவரைப் போல ஒரு 50% ஆயினும் எனது மகனுக்கு நான் ஒரு தந்தையாக இருந்தாலே பெரிய விடயம். எனது கல்விப் பயணம் புளியவத்தை TMV யில் இருந்து மீண்டும் தொடங்கியது, இப்போது நான் எனது கனவிலும் நினைத்திராத ஒரு இடத்தில் இருக்கிறேன் என்பதே உண்மை.
பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகவும் கடினமான சுமையை கொடுக்கிறார்கள். புலமைப்பரிசில் பரீட்சை ஒரு சிறந்த வியாபாரமாகவும் மாறிவிட்டது. உண்மையில், குழந்தைகள் இன்னும் இந்த சுமையை புரிந்து கொள்ளும் அளவு முதிர்ச்சி அடையவில்லை. எனவே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிள்ளைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் பிள்ளை சித்தி அடைந்தாலும் அல்லது தோல்வியடைந்தாலும், கல்வியின் பெறுமதியை பற்றிய அவர்களின் புரிதல் காலப்போக்கில் தெரிய ஆரம்பிக்கும். கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவும் சூழலை அவர்களுக்கு உருவாக்குங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள் மற்றும் பிறருக்கு மரியாதை கொடுப்பதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள், ஏனெனில் இந்த பண்புகள் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிக முக்கிய பங்களிக்கும்.
கலாநிதி. நவரட்ணராஜா
சிரேஷ்ட விரிவுரையாளர்
பொறியியற் பீடம்
பேராதனைப் பல்கலைக்கழகம்