போகம்பறை சிறைச்சாலை கட்டிடம் தொடர்பில் அமைச்சரின் பணிப்புரை!

Byadmin

Nov 9, 2023


நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் திருத்தியமைக்கப்பட்ட வரலாற்றுப் பெறுமதி மிக்க கண்டி போகம்பறை சிறைச்சாலைக் கட்டடத்திற்கு செலவான பணத்தைப் பெற்றுக்கொண்டு அதனைத் தலதா மாளிகைக்கு வழங்குவதற்கு அல்லது வேறு முதலீட்டுத் திட்டத்துக்குப் பயன்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் (07) அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
இதற்கு அமையத் தேவையான அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் தயாரிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அண்மையில் (07) பாராளுமன்றத்தில் நடைபெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
திருத்தவேலைகளின் பின்னர் தற்பொழுது இந்த சிறைச்சாலைக் கட்டடம் ஒரு வருடத்துக்கு அண்மித்த காலமாகப் பயன்படுத்தப்படாதிருப்பதாகவும் இத்திட்டத்தை விரைவில் பூர்த்தி செய்வதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் இதுவரை இடைநிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் காணப்படும் இவ்வாறான பிரச்சினைகளைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் முன்வைத்த பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படாமை குறித்து கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்திய அமைச்சர், நகர அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தப் பிரச்சினைகளில் வினைத்திறனாக தலையிட்டு அவற்றுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *