மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகமுவ பிரதேசத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் போலி இலக்கத்தகடு இரண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபருடன் குறித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர் மஹரகம, கொடிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், ஹோமாகம பிரதேசத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் எனவும் கொட்டாவ, கெஸ்பேவ மற்றும் மஹரகம பொலிஸ் பிரிவுகளில் உள்ள வீடுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் சந்தேகநபர் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்போது, சந்தேகநபரால் திருடப்பட்டதாக தெரிவிக்கப்படும் தொலைக்காட்சி பெட்டி, கேமரா, கையடக்க தொலைபேசிகள் 5 உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபகரணங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.