உயிரிழந்த நான்கு காட்டு யானைகள் குறித்து சுற்றாடல் மற்றும் வனஜீவராசி வளங்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளன.
காட்டு யானைகள் அதிகமாக காணப்படும் வனப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் நபர்கள் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக உடனடியாக தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கு பிரதேச பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் உதவியைப் பெற எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீகிரியாவின் திகம்பதன பகுதியில் முருங்காஹிடிகந்த வனப்பகுதிக்குள் சுமார் ஒரு வருட காலத்திற்குள் மூன்று காட்டு யானைகள் இறந்ததாகவும், சமீபத்தில் கல்கமுவ எஹெட்டுவெவ பகுதியில் ஒரு யானை இறந்ததாகவும் செய்திகள் வௌியாகின.
சீகிரியாவின் திகம்பதன பகுதியில் உயிரிழந்த ஒரு யானை தொடர்பில் முதன்முதலில் 03.02.2025 அன்று வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தினால் தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் A/873/25 கீழ் வழக்குத் தாக்கல் செய்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏனைய இரண்டு காட்டு யானைகளும் அதே வனப்பகுதியில் இறந்துள்ளதாக கூறப்படுகிறது, அவற்றில் ஒன்று ஆண் யானை என்று தெரிவிக்கப்படுகிறது.
யானையின் தந்தங்கள் அகற்றிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு யானைகளும் முதன்முதலில் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (22) அவதானிக்கப்பட்டது.
கல்கமுவ பகுதியில் உயிரிழந்த காட்டு யானை தொடர்பான விடயங்களை, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் கல்கமுவ நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.