ஒரே பெண்ணை திருமணம் செய்த 2 சகோதரர்கள்

ByEditor 2

Jul 20, 2025

இந்தியாவின் சில பகுதிகளில் ஒரே பெண்ணை ஒருவருக்கு மேற்பட்டோர் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. குறிப்பாக இமாச்சல், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆனால், அதுபோன்ற திருமணங்கள் அவ்வளவாக வெளியில் தெரியாது. வீட்டுக்குள்ளேயே உறவினர்கள் மத்தியில் நடைபெறும்.

ஆனால், இமாச்சல் மாநிலத்தில் சமீபத்தில் பகிரங்கமாக வெகு விமரிசையாக ஒரே பெண்ணை 2 பேர் திருமணம் செய்யும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இமாச்சல் மாநிலம் சிர்மவுர் மாவட்டத்தில் உள்ளது ஷில்லாய் கிராமம்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பிரதீப் நெகி, கபில் நெகி. இவர்கள் ஹட்டி இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமத்துக்கு அருகில் உள்ள குன்ஹட் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சுனிதா சவுகான். இந்நிலையில், சுனிதாவை சகோதரர்கள் பிரதீப் மற்றும் கபில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதுவும் இந்த திருமணம் பகிரங்கமாக பொது வெளியில் நடத்தப்பட்டது. இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஹட்டி இனத்தில் இதுபோல் ஒரே பெண்ணை 2 பேர் திருமணம் செய்யும் முறைக்கு ஜோடிதரன் அல்லது திரவுபதி பிரதா என்று பாரம்பரியமாக அழைக்கின்றனர். இந்த வழக்கம் சிர்மவுர் மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் உத்தராகண்ட் மாநிலத்தில் காணப்படுகிறது.

மூதாதையர்களின் சொத்து பிரிந்து போக கூடாது என்பதற்காகவும், எந்தப் பெண்ணும் கணவனை இழந்தவர்கள் என்ற நிலைக்கு ஆளாவதை தடுக்கவும் இது போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்வதாக கூறுகின்றனர். எனினும், இந்த நடைமுறை தற்போதைய கலாச்சார மாற்றம், நவீனம் போன்வற்றால் கணிசமாக குறைந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.

முடிவு என்னுடையது: ஜல்சக்தி துறையில் பிரதீப் பணியாற்றுகிறார். இவரது சகோதரர் கபில் வெளிநாட்டில் விருந்தினர் உபசரிப்பு துறையில் இருக் கிறார். மணப்பெண் சுனிதா கூறும்போது, “இந்த முடிவு என்னுடையது. என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இந்த பாரம்பரிய வழக்கத்தைப் பற்றி நான் நன்கறிவேன். விருப்பப்பட்டுதான் இந்த முறையை தேர்ந்தெடுத்தேன்” என்றார்.

அதன்படி, கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ 3 நாட்கள் திருமண சடங்குகள் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *