புதிய கல்விச் சீர்திருத்தம்

ByEditor 2

Jul 17, 2025

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுவிட்டதாக மேற்கொள்ளப்படும் பொய்யான பிரச்சாரங்கள் குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 

கல்வியையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேல் மாகாண கல்வித் துறை சார்ந்த உத்தியோகத்தர்களிடையே புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று (17) மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர், 

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் அழகியல், வரலாறு ஆகிய பாடங்களோடு தொழில்சார் பாடமும் கட்டாயமாகக் கற்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார். எனினும், இந்த தேசிய வேலைத்திட்டம் குறித்த சரியான ஆய்வை மேற்கொள்ளாத சிலர், வரலாறு மற்றும் அழகியல் கல்வி நீக்கப்பட்டுவிட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

மேற்கண்ட பாடங்கள் தொடர்பாகப் பாட நிபுணர்களுடன் பல நாட்கள் கலந்துரையாடி, அனைத்து மாணவர்களிடமும் வரலாறு குறித்த அறிவையும், மனிதநேயம் குறித்த குணாதிசயங்களையும் வளர்க்க உதவும் அழகியல் கல்வியைக் கற்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையிலேயே இந்த கல்விச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் விளக்கமளித்தார். 

“நாம் அரசியல் செய்வோம், ஆனால் கல்வியையும் குழந்தைகளையும் அதன் பால் ஈர்க்காமல் இருப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்தக் கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் இந்தப் பாடங்களை எவ்வாறு கற்க வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறியிருப்பதாகவும், தனது துறைக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படாத தரமான சிறுவர்களை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் புரிந்துகொண்டே இந்தச் சீர்திருத்தத்தைச் செய்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஆகவே, புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய உண்மையான விடயங்களை அறிந்துகொண்ட அனைவரும் உண்மை நிலவரத்தைச் சமூகத்திற்கு எடுத்துச் செல்லுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். 

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனேவிரத்ன, தொழில்சார் கல்வி இணை அமைச்சர் நலின் ஹேவகே, தொழிலாளர் இணை அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுஃப், பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுணஆரச்சி, சஞ்சீவ ரணசிங்ஹ, ருவன் மாபலகம, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, மேல் மாகாண பிரதம செயலாளர் பிரதீப் புஷ்பகுமார் ஆகியோரும், தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைத் திணைக்களம், மேல் மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *