பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் (UPDATE)

ByEditor 2

Jul 17, 2025

பொரளை பொலிஸ் பிரிவின் சர்பன்டைன் வீதிப் பகுதியில் உள்ள ஒரு கடையில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கடந்த ஜூலை 8 ஆம் திகதி கடையில் இருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தனர். இந்த சம்பவம் குறித்து பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன்படி, நேற்று (16) மாலை சஹஸ்புர பகுதியில் வைத்து பொரளை பொலிஸ் அதிகாரிகள் குழு, இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காக சந்தேக நபர் ஒருவரை குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இம்புல்கஸ்தெனிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

இந்த சந்தேக நபர் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், குற்றத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் நேற்று மாலை பொரளை பொலிஸ் பிரிவின் சீவலி ஒழுங்கை பகுதியில் 11 கிராம் 115 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். 

அதற்கமைய, கைதான நபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போலி வாகன இலக்கத் தகடு, ஒரு வாள், குற்றவாளிகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றைக் கைப்பற்றினர். இவை இந்தக் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவந்தது. 

சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *