கல்லூரி முதல்வர் அலுவலகத்தின் அருகே பெற்றோல் ஊற்றி தீக்குளித்த மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில், பேராசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி முறைப்பாடு குழுவிடம் ஜூலை 1 ஆம் திகதி மாணவி முறைப்பாடு அளித்துள்ளார். அந்த முறைப்பாட்டில் பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகவும், மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்திருந்தார்.
இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் சமீர்குமார் சாஹு மறுத்தார்.
அதனை தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் இந்த முறைப்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12 ஆம் திகதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெற்றோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார்.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த மாணவியை மீட்டு புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு மாணவியை பரிசோதனை செய்த வைத்தியர்கள், மாணவி 95 சதவீத தீக்காயங்களுடன் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக ஒடிசா பொலிஸார் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், தீக்குளித்த 22 வயது கல்லூரி மாணவி, 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார்.