காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூடு – கடுமையாகும் சட்டம்!

ByEditor 2

Jul 15, 2025

காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில், வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இன்று (15) மதியம் சுற்றாடல் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. 

சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி மற்றும் பிரதி அமைச்சர் என்டன் ஜயக்கொடி ஆகியோர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குறித்து வனவிலங்கு திணைக்களம் தொடர்ந்து அறிக்கைகளைப் பெற்று வருவதுடன், காட்டு யானைகளை சுடுவதற்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சரால், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகள் தொடர்பில் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தவும், வன விலங்குகளைக் கொல்வது தொடர்பான சட்டங்களை புதுப்பிப்பதன் மூலம் குற்றவாளிகளைத் தண்டிக்கும் செயல்முறையை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

யானை – மனித மோதலுக்கு தீர்வு காண சுற்றாடல் அமைச்சகமும் வனவிலங்குத் திணைக்களமும் தற்போது இணைந்து செயல்பட்டு வருவதுடன், யானை – மனித மோதல் அதிகமாக உள்ள மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு யானை வேலி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் பராமரிப்புக்காக பல்நோக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் சிவில் பாதுகாப்புப் படைகளின் உதவியும் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், காட்டு யானைகள் சுட்டுக் கொல்லப்படுவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

இது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க அடுத்த சில நாட்களில் விசேட ஊடக சந்திப்பு நடத்தப்படும் என்று வனவிலங்குத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *