வைத்தியசாலை சென்றவரின் பிறப்புறுப்பை நீக்கிய வைத்தியர்

ByEditor 2

Jul 5, 2025

சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்ற 28 வயது இளைஞரின் அனுமதி இல்லாமலேயே அவரது பிறப்புறுப்பை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகுர் ரஹ்மான் (28). இவரது பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அசாம் மாநிலம் சில்சாரில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். சிகிச்சையின் போது பயாப்ஸி என்ற சோதனை செய்ய வேண்டும் என்று வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அதிகுர் ரஹ்மானுக்கு பயாப்ஸி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் போது, அதிகுர் ரஹ்மானின் அனுமதி இல்லாமலேயே அறுவை சிகிச்சை செய்து அவரது பிறப்புறுப்பை வைத்தியர்கள் அகற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து வைத்தியசாலை அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட வைத்தியரை, அதிகுர் ரஹ்மான் தொடர்பு கொண்ட போது எந்தவித அழைப்புக்கும் மெசேஜுக்கும் பதிலளிக்கவில்லை. இதில் மனமுடைந்த பாதிக்கப்பட்ட அதிகுர் ரஹ்மான், பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார். இது குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசிய அதிகுர் ரஹ்மான், “எனது பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சில்சாரில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கடந்த ஜூன் 19ஆம் திகதி சென்றிருந்தேன். அப்போது வழக்கமாக எடுக்கப்படும் பயாப்ஸி பரிசோதனை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தினர். அதற்கு நானும் சம்மதித்தேன். பயாப்ஸி பரிசோதனையின் போது, எனது அனுமதி இல்லாமலேயே அறுவை சிகிச்சை மூலம் எனது பிறப்புறுப்பை அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கண்விழித்து பார்த்த போது, எனது பிறப்புறுப்பு அகற்றப்பட்டிருப்பதை உணர்ந்தேன். 

இது குறித்து வைத்தியரிடம் கேட்டபோது, அவர் சரியான பதிலை அளிக்கவில்லை. நான் இப்போது உதவியற்றவனாக இருக்கிறேன், எனக்கு என்ன செய்வதன்று தெரியவில்லை. எனது வாழ்க்கை முடிந்துவிட்டது. நான் வைத்தியரை பல முறை தொடர்பு கொண்டேன். ஆனால் எனது செல்போன் அழைப்புகளை அவர் எடுக்கவே இல்லை. எனக்கு மன உளைச்சலாக இருக்கிறது. அறுவை சிகிச்சை காரணமாக எனக்கு ஒரு பிரச்சனை உள்ளது. இந்த வழக்கில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேதனையுடன் வேண்டுகோள் வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *