நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் ஆரம்பம்

ByEditor 2

Jun 30, 2025

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று (30) முதல் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி, இந்த விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, வருடத்தில் கடந்த ஐந்து மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி, ஏப்ரல் மாதத்தில் 5,175 டெங்கு நோயாளர்களும், மே மாதத்தில் 6,025 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, டெங்கு நோய் பரவலைத் தடுக்க 16 சுகாதார வலயங்களில் 95 பகுதிகளை உள்ளடக்கி சுகாதார அமைச்சு விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகள் கடந்த மே 19 முதல் 24 வரை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 128,824 வளாகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

சமீபத்திய நாட்களில் பெய்த தொடர் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சு, தற்போது வாரத்திற்கு சுமார் 1,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக நடமாடும் குழுக்கள் அனுப்பப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *