அபிவிருத்தி கொள்கைகளை செயல்படுத்த விசேட கலந்துரையாடல்

ByEditor 2

Jun 27, 2025

எமது நாட்டில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் (Research & Development ) துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் ஏற்கனவே பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

புதிய தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கையை வரைவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய மற்றும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் (NASTEC) தலைவர் பேராசிரியர் ரொஹான் பெர்னாண்டோ உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள், அரச மற்றும் தனியார் துறை வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் அடங்கிய குழு, ஆகியோர் இதற்கான வளவாளர்களாக பங்களிப்புச் செய்கின்றனர். 

இந்த புதிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசிப்பதன் முக்கியத்துவமும் அடையாளங்காணப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி செயலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்யும் தொடர் கூட்டங்கள் அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளன. 

அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச மற்றும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள், பல்கலைக்கழக சமூகம் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். 

அனைத்து துறைகளின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் இந்த தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கையில் இணைப்பதே இதன் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இந்தப் புதிய கொள்கையின் ஊடாக அரசாங்கத்தின் தேசிய வளர்ச்சி தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, புத்தாக்கங்களின் வணிகமயமாக்கலை துரிதப்படுத்தும் என்றும், அதன் மூலம் சமூக அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை எட்டவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *